இருள் நீக்கும் சூரிய ஒளியாக தினத்தந்தி - திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வாழ்த்து


இருள் நீக்கும் சூரிய ஒளியாக தினத்தந்தி - திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வாழ்த்து
x
தினத்தந்தி 5 Nov 2017 2:00 PM IST (Updated: 5 Nov 2017 3:49 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி பவளவிழாவை முன்னிட்டு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


சென்னை, 

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-
 
“காரிருள் அகத்தில் நல்ல கதிரொளி நீதான். இந்தப் பாரிடை துயில்வோர் கண்ணில் பாய்ந்திடும் எழுச்சி நீதான்” என்று பாவேந்தர் பாரதிதாசன் பத்திரிகைகள் பற்றி இயற்றிய கவிதைக்கேற்ப, இருள் நீக்கும் சூரிய ஒளியாக, உறக்கத்திலிருக்கும் மனிதர்களை செய்திகள் மூலம் விழிக்கச் செய்து, சுற்றியிருக்கும் சமூக நிகழ்வுகள் தொடர்பான உணர்வினை ஊட்டும் ஊடகமாகத் திகழ்கிறது தினத்தந்தி.

தமிழ் ஊடக உலகின் முழு நிலவாக திகழ்ந்து கொண்டிருக்கும் திராவிட இயக்கத்தின் நூற்றாண்டுப் பயணத்தில், ‘தினத்தந்தி’ நாளிதழ் முக்கால் நூற்றாண்டு கைகோர்த்துப் பயணித்து, தமிழர்களின் தன்மான உணர்வுக்கும், சுய மரியாதைக்கும் வெளிச்சம் தரும் கைவிளக்காக தொண்டாற்றிக் கொண்டிருக்கிறது என்பதை அந்த இதழ் ‘பவள விழா’ கொண்டாடும் இந்த நேரத்தில் நினைத்து நினைத்து நெஞ்சத்தில் பெரு மிதம் கொள்கிறேன்.

இந்த இதழை 15.10.1942ல் துவங்கிய ‘தமிழர் தந்தை’ சி.பா. ஆதித்தனார் அவர்கள் செய்திகளை நடுநிலையுடன் வெளியிடுவதிலும், ஒரு செய்தியின் ஒட்டுமொத்த விவரங்களையும் துணிச்சலுடன் முழுமையாக வெளிப்படுத்துவதிலும், பாமர வாசகர்களும் படித்து உணரும் எளிய மொழிநடையில் வழங்கு வதிலும் தனி இலக்கணம் வகுத்துக் கொண்டு நடத்தி வந்தார் என்பது தமிழ் பத்திரிக்கையுலக வரலாற்றின் சிறப்புகளில் செதுக்கி சேர்க்கப்பட்டுள்ள இன்னொரு வைர கிரீடம் என்றே எண்ணுகிறேன்.

பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் ஆகி யோருடன் ‘தமிழர் தந்தை’ சி.பா. ஆதித்தனார் அவர் களுக்கு இருந்த உறவு என்பது எல்லையில்லா இன - மொழி உணர்வின் அடிப்படையிலானது. தலைநிமிர்ந்து நடக்கும் தமிழனின் தன்மான உணர்வின் பேரூற்றால் நிரம்பியது என்பதை திராவிட இயக்கத்தில் உள்ள ஒவ்வொருவரும் அறிவர். அதனால்தான் பேரறிஞர் அண்ணா முதல் - அமைச்சராக பொறுப்பேற்றவுடன் சி.பா. ஆதித்தனார் அவர்களை தமிழர்களின் சுயமரியாதைக் குரல் ஒலிக்கும் தமிழக சட்ட மன்றத்தின் பேரவைத் தலைவராக தேர்வு செய்தும், அதன் பிறகு தலைவர் கலைஞர் ஆதித்தனார் அவர்களை கூட்டுறவுத்துறை அமைச்சராக நியமித்தும் அழகு பார்த்தார். 

திராவிட இயக்க நூற்றாண்டு, பேரறிஞர் அண்ணா முதலமைச்சரான பொன்விழா ஆண்டு, தலைவர் கலைஞரின் சட்டமன்ற வைரவிழா ஆண்டு, இவற்றுடன் தினத்தந்தியின் பவளவிழா ஆண்டு அனைத்தும் ஒரே நேரத்தில் சங்கமித்திருப்பதிலிருந்தே திராவிட இயக்கத்துக்கும் தினத்தந்தி நாளிதழுக்கும் இடையில் உள்ள இணைபிரியா உறவு, எவரெஸ்ட் சிகரம் போல் உயர்ந்து நிற்பதை உணர முடியும்.

‘தமிழர் தந்தை’ அவர்கள் தலைவர் கலைஞர் மீது எந்த அளவுக்கு பற்றும், பாசமும் வைத்திருந்தார் என்பதற்கு ஒரு உதாரணத்தை சொல்ல வேண்டுமென்றால், பேரறிஞர் அண்ணாவின் மறைவுக்குப் பிறகு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் கலைஞரை ‘இரண்டாவது அண்ணா’ என்று 9.3.1969 அன்று நடைபெற்ற பாராட்டுக் கூட்டத்தில் ஆதித்தனார் அவர்கள் வர்ணித்தார்.

தலைவர் கலைஞர் அந்த மேடையிலேயே, “அண்ணாவைப் போல் இன்னொருவர் உருவாக முடியாது” என்பதை அழுத்தம் திருத்தமாகத் தன் பேச்சில் குறிப்பிட்டார். இது இருவருக்குமான முரண்பாடாக கருத முடியாது. தமிழர் தந்தை அவர்கள் தலைவர் கலைஞர் மீது கொண்ட நம்பிக்கையாகவும், தலைவர் கலைஞர் தனது தலைவரான அண்ணா மீது கொண்டிருந்த மாசற்ற மதிப்புக்கும் அடையாளமாகக் கருத வேண்டும்.  

ஆதித்தனார் அவர்களுடனான நட்பு தமிழுக்கும்- தமிழர்களுக்கும் இடையில் உள்ள ஆலமரத்தின் விழுதுகள் போல் இன்றும் நீட்சிபெற்றுத் தொடருகிறது. இந்த நல்லுறவும் நட்பும் என்றும் தொடரும் என்று நம்புகிறேன். ‘தமிழர் தந்தை’ அவர்கள், தனது பத்திரிக்கைத்துறை வாழ்க்கையில் கொடுஞ்சிறைக்கும் அஞ்சியதில்லை. பத்திரிக்கை சுதந்திரத்தை பாதுகாப்பதில் கொடுமைகளுக்கும் மிரண்டதில்லை. தமிழர்களின் உரிமைகளுக்காக மட்டுமே தன் தொண்டை தொய்வின்றி சிறப்பாக ஆற்றியவர் - அந்தப் பணியை இன்றளவும் ‘தினத்தந்தி’ நாளிதழ் திக்கெட்டும் செய்திகளை கொண்டு செல்வதில் கடைப்பிடித்துப் பின்பற்றி வருகிறது. 
 
‘தினத்தந்தி’ நாளிதழுக்கு ஜாதியோ, மதமோ தெரியாது. ஆனால் சமத்துவம் தெரியும். அதனால்தான் இந்த இதழ் இதுவரை அனைத்து சமுதாயத்திற்குமான செய்திகளை சுமந்து நிற்கும் ஒரு நிழற்குடை போல் தொண்டாற்றி வருவதும், அப்படிப்பட்ட பெருமைகளைக் கொண்டுள்ள இதழ், ‘பவள விழா’ காணுவதும் தமிழினத்தின் தனித்துவமிக்க அடையாளமாகவே திராவிட முன்னேற்றக் கழகம் உணருகிறது என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

“தமிழனின் உரிமைகள் பறிபோகாமல் பாதுகாக்கப்பட வேண்டும். தமிழ்மொழி வளத்தோடும் வளர்ச்சியோடும் விளங்க வேண்டும். தமிழர்கள் தங்கள் உரிமைகள் பறிக்கப்படும் போது தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும்” என்ற உயர்ந்த லட்சியத்தோடு தினத்தந்தி நாளிதழை தொடங்கினார் ஆதித்தனார் அவர்கள் என்று ‘தினத்தந்தி’யின் வெள்ளி விழாவில் பேரறிஞர் அண்ணா உரையாற்றினார். 

அந்த லட்சியத்துக்கு துளிகூட இடையூறு வராமல் எழுச்சிமிகு பயணத்தில் ‘தமிழர் தந்தை’ அவர்களின் அடியற்றி சிவந்தி ஆதித்தனார், பால சுப்ரமணிய ஆதித்தன் அவர்கள் என மூன்று தலைமுறையாகத் ‘தினத்தந்தி’ நாளிதழ் இன்றும் எல்லா திசை நோக்கியும் சென்று கொண்டிருக்கிறது. மகாகவி பாரதியின் வார்த்தைகளில் சொல்வ தென்றால் ‘நிமிர்ந்த நன்னடை’, ‘நேர்கொண்ட பார்வை’, ‘நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள்’, ‘திமிர்ந்த ஞானச் செருக்கு’ என்ற அரிய அணிகலன்களுடன் செய்தி உலகத்தின் அரியணையில் ‘தினத்தந்தி’ அமர்ந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. 

சீர்மிகு இந்தப் பணி எப்போதும் தொடரட்டும்; ‘தினத்தந்தி’ நாளிதழ் நூறாண்டுகளை கடந்தும் தமிழினத்துக்காகவும், அனைத்து சமுதாயத்தின் சமத்துவத்திற்காகவும் குரல் கொடுக்கட்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இதயப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

Next Story