சென்னையில் இயல்பு நிலை திரும்புகிறது 5 நாட்களுக்கு பிறகு சூரியன் தலை காட்டியது


சென்னையில் இயல்பு நிலை திரும்புகிறது 5 நாட்களுக்கு பிறகு சூரியன் தலை காட்டியது
x
தினத்தந்தி 6 Nov 2017 4:00 AM IST (Updated: 6 Nov 2017 2:14 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலை திரும்புகிறது. 5 நாட்களுக்கு பிறகு சூரியன் நேற்று தலை காட்டியது.

சென்னை,

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. குறிப்பாக கடலோர மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், நாகை, கடலூரில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 62 செ.மீ.க்கு அதிகமாக மழை பெய்துள்ளது. இது இயல்பைவிடவும் 93 சதவீதம் அதிகம் ஆகும். இதனால் இந்த பருவமழை காலத்தில் அதிக மழைப்பொழிவை சென்னை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரையிலும் மழை ஓய்வெடுத்தது. மழை பெய்ததற்கான அறிகுறி எதுவும் இல்லாத நிலையில் நேற்று காலையில் வெயில் சுட்டெரித்தது. சூரியன் தலை காட்டத்தொடங்கியதால், சாலைகள், தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழை நீர் வடிந்து வருகிறது. மழை ஓய்ந்து வெள்ள நீர் வடிவதால் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இயல்பு நிலை திரும்பி வருகிறது.

எழும்பூர், வேப்பேரி, நுங்கம்பாக்கம், சேத்துப்பட்டு, கோடம்பாக்கம், கீழ்ப்பாக்கம், சிந்தாதிரிப்பேட்டை, அசோக்நகர், தியாகராயநகர், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், வளசரவாக்கம், முகப்பேர், கோயம்பேடு, விருகம்பாக்கம், புரசைவாக்கம், அமைந்தகரை, சூளைமேடு, வடபழனி, பெரம்பூர், கிண்டி, அடையார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று காலையில் மேகமூட்டத்துடன், அவ்வப்போது சூரியனும் தலைகாட்டியது.

சில இடங்களில் திடீரென லேசான மழையும் பெய்து வந்தது. கடந்த 5 நாட்களுக்கு பின்னர் சூரியன் தலை காட்டியதால், தாய்மார்கள் அழுக்கு துணிகளை துவைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர். பெரும்பாலான வீட்டின் மொட்டை மாடிகளில் துணிகள் காயப்போடப்பட்டிருப்பதை காணமுடிந்தது.

சென்னையில் நேற்று முன்தினம் காலையில் மழைக்கால சூழல் இன்றி காணப்பட்டது. ஆனால் மாலையில் நேர் எதிராக சில இடங்களில் மழை பெய்தது. அதேபோன்ற சூழல் நேற்றும் நீடித்ததால் மாலை நேரத்தில் என்ன நடக்குமோ? என்ற அச்சத்தில் சிலர் உறைந்தனர். காலையில் வெயில் அடித்த நிலையில், மாலையில் சென்னை எழும்பூர், புரசைவாக்கம், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, தியாகராயநகர் உள்பட சில பகுதிகளில் மழை பெய்தது. இருந்தாலும், அந்த மழை வெகு நேரம் நீடிக்கவில்லை.

கடந்த 6 நாட்களாக பெய்த மழை காரணமாக சாலைகளில் தேங்கிய தண்ணீரில் தத்தளித்தப்படி சென்ற பெரும்பாலான வாகனங்கள் பழுதாகின. இவ்வாறு பழுதாகிய வாகனங்கள் அனைத்தும் மெக்கானிக் கடைகளில் ஒதுங்கியுள்ளன. வாகனங்கள் பழுதுபார்க்கும் மெக்கானிக்குகளுக்கு கடும் ‘கிராக்கி’ ஏற்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை வழக்கமாக விடுமுறை விடும், மெக்கானிக்குகளும் நேற்று கடையை திறந்து வைத்து பழுதுபார்ப்பு பணிகளில் ஈடுபட்டனர்.


Next Story