மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க 600 மருத்துவக் குழுக்கள்


மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க 600 மருத்துவக் குழுக்கள்
x
தினத்தந்தி 6 Nov 2017 4:15 AM IST (Updated: 6 Nov 2017 2:21 AM IST)
t-max-icont-min-icon

மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க 600 மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டு இருப்பதாக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

சென்னை,

தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–  முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையால் கடந்த இரண்டு நாட்களில் தொடங்கப்பட்டு நடைபெற்று வரும் 401 மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் மற்றும் நடமாடும் மருத்துவக் குழுக்களை தொடர்ந்து, கூடுதலாக 150 நடமாடும் சிறப்பு மழைக்கால மருத்துவக் குழுக்கள், 25 நிலவேம்பு குடிநீர் வழங்கும் நடமாடும் வாகனங்கள் மற்றும் குடிநீரில் குளோரின் பரிசோதனை செய்யும் 25 பொதுசுகாதாரக் குழுக்கள், என மொத்தம் 200 மழைக்கால சிறப்பு மருத்துவ வாகனங்களை கொடி அசைத்து தொடங்கிவைத்தார்.

நிகழ்ச்சியில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:–இன்றைக்கு மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனுக்குடன் அந்த பகுதியிலேயே சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஜெயலலிதாவுடைய அரசு மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டு 401 முகாம்கள் செயல்பட்டுவருகின்றன.

அதுமட்டுமல்லாமல், 200 மருத்துவக் குழுக்களோடு நடமாடும் மருத்துவக் குழு இன்று(நேற்று) அனுப்பி வைக்கப்படுகிறது. ஆக மொத்தம் 601 மருத்துவக் குழுக்கள் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனுக்குடன் சிகிச்சை அளிக்கப்படுகின்ற வகையில் அரசால் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

இந்த மழைக்காலங்களில் ஏற்படுகின்ற நோய்களிலிருந்து விடுபடுவதற்கும், உடனுக்குடன் அந்த பகுதியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய நோக்கத்தில் இந்த மழைக்கால சிறப்பு மருத்துவமுகாம், நடமாடும் மருத்துவவசதி மக்களுக்கு ஏற்படுத்தி கொடுக்கப்பட்டிருக்கிறது. பொதுமக்களுக்கு ஏதாவது நோய் அறிகுறி இருந்தால், அந்த பகுதியில் உள்ள சிறப்பு மருத்துவ முகாமிற்கு உடனடியாக சென்று மருத்துவரை அணுகி மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம்.

சித்தமருத்துவர்களும் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். பல்வேறு மருத்துவத் துறையில் இருக்கின்ற மருத்துவர்களும் இங்கே பணிபுரிய வந்திருக்கிறார்கள். அவர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஆகவே மழைக்காலங்களில் தொற்றுநோய் ஏற்படாமல் இருப்பதற்காக அரசு முன்எச்சரிக்கையாக நடவடிக்கை எடுத்துவருகிறது.

அதுமட்டுமில்லாமல், தண்ணீரில் குளோரின் எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை கண்டறிவதற்கும் அதற்கு தகுந்த உபகரணங்கள் அளிக்கப்பட்டிருக்கிறது. தண்ணீரில் குளோரின் எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை கண்டறிந்து மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய அரசு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

ஆங்காங்கே பொதுமக்கள் சுகாதாரமாக இருப்பதற்காக பிளீச்சிங் பவுடர் நடமாடும் குழுவிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்தந்தப் பகுதி மக்களுக்கு அவர்கள் வினியோகம் செய்வார்கள்.

அரசை பொறுத்தவரைக்கும் மக்கள் எந்தவிதத்திலும் பாதிக்கக்கூடாது என்பதற்காக இப்படிப்பட்ட மழைக்கால மருத்துவ சிறப்பு முகாமை ஏற்பாடு செய்திருக்கிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த மருத்துவ முகாமில் பணியாற்றுகின்ற மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் அவர்களுக்கு துணையாக இருப்பவர்களுக்கும், சேவை மனப்பான்மையோடு பணியாற்றுகின்ற அனைவருக்கும் எனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நிகழ்ச்சியில், துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் எம்.விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story