ரெயிலில் கடத்த முயன்ற ரூ.3 கோடி போதை பொருள் பறிமுதல் கடத்தல்காரர்கள் 2 பேர் சிக்கினர்
சென்னையில் இருந்து ஹவுராவிற்கு ரெயில் மூலம் கடத்த முயன்ற ரூ.3 கோடி மதிப்பிலான போதை பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சென்னை,
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆப்பிரிக்க நாடான மலாவியில் இருந்து டெல்லிக்கு விமானம் மூலம் போதை பொருள் கடத்தி வரப்படுவதாக தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் டெல்லி விமான நிலையத்திற்கு சென்று குறிப்பிட்ட விமானத்தில் வந்த பயணிகளை சோதனை செய்தனர். அப்போது போலீசாரின் கண்ணில் சிக்காமல் போதை பொருள் கடத்தல் கும்பல் அவர்களிடம் இருந்து தப்பினர்.
இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகளிடம் தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் எடுத்துரைத்து, மலாவியில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்தவர்களின் பெயர் பட்டியலை பெற்று அவர்களை கண்காணித்தனர். அப்போது சந்தேகப்படும்படியாக தில்லியா எதினா(வயது 40) என்ற பெண் நடந்து கொண்டார்.
அந்த பெண்ணை போலீசார் கண்காணித்தபோது அவர் டெல்லியில் இருந்து சென்னைக்கு தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் செல்லவிருப்பது தெரிய வந்தது. இதுபற்றி சென்னையில் உள்ள போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் வந்த தில்லியா எதினாவை பிடித்து அவரிடம் இருந்து ரூ.1.25 கோடி மதிப்பிலான 22 கிலோ எடை ‘காபின்’ என்ற போதை பொருளை பறிமுதல் செய்ததுடன் அவரையும் போலீசார் கைது செய்தனர்.
பின்பு அவரையும், ஏற்கனவே சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் போதை பொருளுடன் பிடிபட்ட விஷால் என்ற வாலிபரையும் ஒரே அறையில் வைத்து விசாரணை நடத்தினர்.
போலீசார் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையின் போது, தில்லியா எதினா போதை பொருள் கடத்தல் கும்பலை காட்டி கொடுத்தார். ஆனால் போலீசார் அந்த கும்பலை சேர்ந்தவர்களை கைது செய்ய ஆதாரம் இல்லாததால் அவர்களை கடந்த சில வாரங்களாக பின் தொடர்ந்து கண்காணித்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சென்னை சென்டிரலில் இருந்து ஹவுரா மெயிலில் அந்த கும்பலை சேர்ந்த 2 வாலிபர்கள் ஹவுராவிற்கு போதை பொருளை கடத்திச் செல்ல இருப்பதை தெரிந்து கொண்ட போலீசார் அவர்களை பின் தொடர்ந்தனர்.
பிறகு ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாரின் உதவியுடன் ரெயிலின் ஏ.சி. பெட்டியில் இருந்த அந்த 2 வாலிபர்களையும் கீழே இறக்கி அவர்களது உடமைகளை சோதனை செய்தனர்.
அப்போது அவர்களிடம் பிரபல நிறுவனத்தின் தலா 1 கிலோ எடை கொண்ட கோதுமை மாவு பாக்கெட்டுகள் 40 இருந்தன. அவற்றுக்குள் ‘எபிடிரையின்’ என்ற போதை பொருள் மறைத்து வைக்கப்பட்டு இருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
போதை பொருளுடன் சிக்கிய இருவரில் ஒருவர் சென்னை மேற்கு தாம்பரத்தை சேர்ந்த தமீம்(வயது 34) என்பதும், மற்றொருவர் சென்னை பல்லாவரம் பகுதியை சேர்ந்த சேட் சையது ராஸ் (32) என்பதும் தெரிய வந்தது.
கடத்திச் செல்ல முயன்ற போதை பொருளின் மதிப்பு சர்வதேச சந்தையில் சுமார் ரூ.3 கோடி ஆகும்.