தமிழ் மக்களின் வாழ்வோடு ஒன்றிணைந்தது ’தினத்தந்தி’ ஓ.பன்னீர் செல்வம் வாழ்த்து
தமிழ் மக்களின் வாழ்வோடு ஒன்றிணைந்தது ‘தினத்தந்தி’ என்று துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை,
‘தினத்தந்தி’ நாளிதழ் 1942–ம் ஆண்டு தொடங்கப்பட்டு, தற்போது வெற்றிகரமாக 75 ஆண்டுகள் நிறைவு செய்து, பவள விழா கொண்டாடப்படவிருப்பதை அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். அனைத்து தரப்பு மக்களும் உலக நிகழ்வுகளை விரைவில் அறிந்து கொள்ள வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில் சி.பா.ஆதித்தனார் எளிய தமிழில் பாமர மக்களும் படித்து புரிந்து கொள்ளும் வண்ணம் ‘தினத்தந்தி’ நாளிதழை வெளியிட்டார்.
உண்மையான செய்திகளை விருப்பு வெறுப்பு இன்றி, நடுநிலை தவறாமல் மக்களுக்கு அளிக்க வேண்டியது ‘‘ஜனநாயகத்தின் நான்காவது தூண்’’ என்று போற்றப்படும் பத்திரிகை துறையின் கடமையாகும். அந்த வகையில் தினத்தந்தி நாளிதழ் தனது சமூகக் கடமையினை செவ்வனே ஆற்றுவது பாராட்டுக்குரியதாகும். ‘தந்தி’ என்ற பெயருக்கு ஏற்ப செய்திகளை முன்னதாகவும், விரைவாகவும் மக்களுக்கு வழங்கி வருகிறது.
கடந்த 75 ஆண்டுகளாக தமிழக மக்களின் வாழ்வோடு ஒன்றிணைந்து, தமிழ் பத்திரிகை உலகில் தனக்கென்று தனிமுத்திரை பதித்துள்ள தினத்தந்தி நாளிதழ், தொடர்ந்து வருங்காலங்களிலும் தனது சமூகப் பணியினை சிறப்புடன், திறம்பட ஆற்றிட எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:–
பாமர மக்கள் பெரிதும் விரும்பி படிக்கும் ‘தினத்தந்தி’ நாளிதழ் பவள விழா கொண்டாடுவது அறிந்து நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். ‘அன்றைய செய்தியை அன்றே படியுங்கள்’ என்ற முழக்கத்துடன் தந்தி நாளிதழை தொடங்கிய சி.பா.ஆதித்தனார், பாமரமக்களையும் பத்திரிகை படிக்கச் செய்ய வேண்டும் என்ற கொள்கை கொண்டிருந்தார். ஏழை, எளிய பாமர மக்கள் பத்திரிகை படிக்கும் வகையில், பேச்சு வழக்கில் உள்ள எளிய தமிழில் ‘தினத்தந்தி’ நாளிதழை வெளியிட்டு சி.பா.ஆதித்தனார் தனது குறிக்கோளில் வெற்றி பெற்றார்.
உலக நிகழ்வுகளை உள்ளது உள்ளபடி மக்களுக்கு நடுநிலையோடு ‘தினத்தந்தி’ நாளிதழ் வழங்கி வருவதோடு, ஜெயலலிதாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, செயல்படுத்தி வரும் மக்கள் நலத் திட்டங்களை தமிழக மக்களுக்கு எடுத்துரைக்கும் அரும்பணியினையும் ‘தினத்தந்தி’ நாளிதழ் ஆற்றி வருவது பாராட்டுதலுக்கு உரியதாகும்.
தமிழ் செய்திப் பத்திரிகை உலகில் தனக்கென தனி பாதையை வகுத்து, அதில் முழு வெற்றியும் கண்ட ‘தினத்தந்தி’ நாளிதழ், வருங்காலங்களிலும் தனது பத்திரிகைப் பணியை சிறந்த முறையில் ஆற்றி உயர்ந்து விளங்கிட வேண்டும் என்ற எனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.