‘‘அரசியலில் ஈடுபட முடிவு எடுத்தது ஏன்?’’ கமல்ஹாசன் பரபரப்பு பேச்சு
அரசியலில் ஈடுபட முடிவு எடுத்தது ஏன் என்பது குறித்து ரசிகர்கள் கூட்டத்தில் கமல்ஹாசன் விளக்கம் அளித்து பேசினார்.
சென்னை,
நடிகர் கமல்ஹாசன் அரசியலில் ஈடுபட தயாராகி வருகிறார். இந்த நிலையில் ரசிகர்களை நேற்று சந்தித்தார். சென்னை கேளம்பாக்கத்தில் இந்த சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் தமிழகம் முழவதும் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கமல்ஹாசன் நற்பணி இயக்கத்தினர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி நடிகர் கமல்ஹாசன் பேசியதாவது:–
‘‘நாம் 37 ஆண்டுகளாக விளம்பரம் இன்றி சமூக சேவை பணிகளை செய்து வருகிறோம். நமக்கு இன்னும் வேலை நிறைய இருக்கிறது. கையேந்துபவர்கள் பலர் இருக்கிறார்கள். நாமும் கையேந்துகிறோம். யாருக்காக ஏந்துகிறோம் என்றால் தமிழ்நாட்டு மக்களுக்காக ஏந்துகிறோம். 37 வருடமாக ஏந்துகிறேன்.
ஒரு வள்ளல் கூட்டத்தை உருவாக்குவதற்காக இதைச் செய்கிறேன். இங்கு இருக்கிறவர்கள் பலர் கூலி வேலை செய்கிறவர்கள். சிறு வியாபாரம் செய்கிறவர்கள். அவர்கள் தன்னையும் காப்பாற்றிக்கொண்டு தானம் செய்யும் வள்ளல்களாகவும் இருக்கிறார்கள். பணக்காரர்கள் மட்டும் வரி கட்டினாலே போதும் விவசாயிகள் பிர்ச்சினை தீர்ந்து விடும். நாடும் ஓரளவுக்கு சரியாகி விடும்.
அரசியல்வாதிகள் திருடுவது என்பது பற்றியெல்லாம் அதற்கடுத்து வருவோம். பணக்காரர்கள் சிலர் சுரண்டுகிறார்கள். பணக்காரர்களை எனக்கு பிடிக்கவில்லையா என்று கேட்காதீர்கள். நியாயமான பணக்காரர்களை எனக்கு பிடிக்கும். உன் தேவைக்கானதை உலகம் கொடுக்கும். ஆனால் உனது ஆசைக்கானதை கொடுக்க முடியாது. இதை காந்தி சொல்லி இருக்கிறார்.
நமது வேலையை நாம் செய்வோம். பணி செய்து கிடப்பது என்றவுடன் அப்படியே கிட என்று சொல்லி விட்டார்கள். பேசி தோற்றாலும் பரவாயில்லை செய்து விட்டு பலர் தோற்று இருக்கிறார்கள். நல்லபடியாக செய்து பிறகு தோற்கடிக்கப்படுகிறார்கள். அது நடக்கக்கூடாது. மாற வேண்டும். அதற்காகத்தான் அரசியலை கையில் எடுத்து இருக்கிறேன்.
பேரழிவு வந்த பிறகுதான் ஐரோப்பிய அரசுகள் மக்கள் கடமைகளை சரியாக செய்ய ஆரம்பித்தன. அப்படி ஒரு அழிவுக்காக நாம் காத்திருக்க தேவை இல்லை. வரும்முன் காக்க வேண்டும். அதை இன்றில் இருந்தே ஆரம்பிக்க வேண்டும். 37 வருட உழைப்பும் விரயமாகி விட்டது. காணாமல் போய் விட்டது. பஞ்சு மிட்டாய்மாதிரி எடுத்து சாப்பிட்டு விட்டனர்.
நீங்கள் எத்தனைபேர் இருக்கிறீர்கள் என்று மற்றவர்கள் கேட்கலாம். எத்தனை பேர் என்பது முக்கியம் அல்ல என்ன செய்வார்கள் என்பதுதான் முக்கியம். அடக்குமுறை என்பது இந்திய அரசியலில் யதார்த்தமாக நடக்கின்ற ஒரு விஷயமாக ஆகிவிட்டது. நான் ஒரு கட்சியை மட்டும் சொல்லவில்லை.
இதற்காக வழக்கு போடலாம். நான் அடி வாங்கிக்கொள்கிறேன். ஆனால் சும்மா சும்மா தட்டி பார்க்கக்கூடாது. நான் ஒன்றும் மிருதங்கம் இல்லை. பயங்கரவாதம் வேறு. தீவிரவாதம் வேறு. குற்றம் உள்ள நெஞ்சு இருப்பவர்களுக்குத்தான் பயம் இருக்கும். இங்கு எத்தனையோ இந்துக்கள் இருக்கிறார்கள். என் குடும்பத்திலும் நிறைய இந்துக்கள் இருக்கிறார்கள். எனது மகள் சாமி கும்பிடும்போது நான் தடுப்பது இல்லை.
எனது பகுத்தறிவை என் பெண்ணுக்கு நான் போதிக்கவில்லை. மதத்தின் பெயரால் விஷத்தை ஊட்டும்போது அதை சாப்பிடாதீர்கள் என்றுதான் சொல்கிறேன். தெய்வத்தின் பட்டியலில் ஆறு, குளத்தை சேர்க்கும்படி சொல்லி இருக்கிறேன். பயன் கிடைக்கும் என்றால் அவற்றை கும்பிட வேண்டியதுதான்.
கோவிலை இடிக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. அவையும் நமது கட்டிடம் தான். எனக்கு படப்பிடிப்புக்கு செல்ல வேண்டி இருக்கிறது. வழக்குகளிலும் ஜெயிக்க வேண்டி இருக்கிறது. ஜெயிலுக்கு போவதில் அவமானம் இல்லை. திருடிவிட்டு ஜெயிலுக்கு போகவில்லை. திருட்டுத்தனம் செய்பவர்கள் பெரிய மனிதர்கள் மாதிரி திரிவதை தாங்கமுடியவில்லை.
நல்ல காரியத்துக்கு ஜெயிலுக்கு போவது அவமானம் இல்லை. மக்கள் பணத்தை கொள்ளையடித்தவர்கள்தான் தலையில் துண்டை போட்டு வர வேண்டும். இது ஆரம்ப கூட்டம்தான். இன்னும் பல கூட்டங்கள் நடத்தப்படும். கொஞ்சம் கொஞ்சமாகத்தான் நாம் வரமுடியும். உடனே எந்த முடிவும் எடுக்க முடியாது.
பிறந்த நாளில் கேக் வெட்டுவதை ரத்து செய்து விட்டேன். இது கால்வாய் வெட்டும் நேரம். 37 வருடம் நமக்கு எதற்கு என்று ஒதுங்கி இருந்து விட்டேன். இனி ஒதுங்கி இருக்க மாட்டேன். இனியும் ஒதுங்கி இருந்தால் நான் நன்றி கெட்டவனாக ஆகி விடுவேன். யார் உத்தரவுக்காகவும் நான் காத்திருக்கவில்லை.
முன்னேற்பாடுக்காகத்தான் காத்திருக்கிறேன். அதை செய்து கொண்டு இருக்கிறோம். கசாயம் கொடுப்பதை அரசு செய்யட்டும். அளவுக்கு அதிகமாக நாம் நிலவேம்பு கொடுத்து தவறு நடந்து விடக்கூடாது. எல்லோருக்கும் உதவி செய்யுங்கள். அதை நான் பிறந்த பயனாக கருதுகிறேன். இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.