வெள்ளம் பாதித்த பகுதிகளை எடப்பாடி பழனிசாமி 2-வது நாளாக பார்வையிட்டார்


வெள்ளம் பாதித்த பகுதிகளை எடப்பாடி பழனிசாமி 2-வது நாளாக பார்வையிட்டார்
x
தினத்தந்தி 6 Nov 2017 5:30 AM IST (Updated: 6 Nov 2017 3:21 AM IST)
t-max-icont-min-icon

சென்னை நகரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று 2-வது நாளாக நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சென்னை,

தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் காஞ்சீபுரம் மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கடந்த 3-ந் தேதி நேரில் சென்று போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப் பணிகளை பார்வையிட்டு, ஆய்வு செய்தார். மேலும், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி ஆறுதல் கூறினார்.

அதனைத் தொடர்ந்து, இன்று (நேற்று) சென்னை கொடுங்கையூர், லிங்க் கால்வாயில், ஐரோப்பாவில் உள்ள ‘லிச்சென்ஸ்டீன்’ நாட்டிலிருந்து வாங்கப்பட்ட ‘ரொபாட்டிக் எக்ஸ்கவேட்டர்’ எந்திரம் மூலம் அடைப்பு சீர்செய்யும் பணிகளை பார்வையிட்டு, பணிகளை விரைந்து செயல்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

சென்னை, ரெட்டை ஏரி சந்திப்பு அருகில் ‘வீனஸ்’ நகர் பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை மோட்டார்கள் மூலம் அகற்றும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். விவேகானந்தா பிரதான சாலை, திருமலை நகரில் நடைபெற்ற மருத்துவ முகாமை பார்வையிட்டு, முதியோர் மற்றும் குழந்தைகள் உள்பட சுமார் 200 பயனாளிகளுக்கு, ரொட்டி, பிஸ்கெட் மற்றும் பால் ஆகியவற்றை வழங்கினார்.

தொடர்ந்து, காஞ்சீபுரம் மாவட்டம், சிட்லபாக்கம் பகுதியில் மழைநீரால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களை பார்வையிட்டு, ஆய்வு செய்தார். பல்லாவரம் நகராட்சிக்குட்பட்ட சுவாமிமலைப் பகுதிகளில் உள்ள தெருக்களை பார்வையிட்டார்.

காஞ்சீபுரம் மாவட்டம், பல்லாவரம் நகராட்சி, அனகாபுத்தூர் கிராமத்தில் மின்னல் தாக்கி பலியான லோகேஷ், கிஷோர்குமார் ஆகியோரின் குடும்பத்திற்கு, ‘முதல்-அமைச்சரின் மாநில பேரிடர்’ நிவாரண நிதியிலிருந்து, தலா ரூ.4 லட்சம் வீதம், ரூ.8 லட்சத்திற்கான காசோலைகளை வழங்கி, ஆறுதல் கூறினார்.

பின்னர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இந்த இரண்டு மாத பருவகாலங்களில் 79 செ.மீ. மழை பொழிந்திருக்க வேண்டும். ஆனால் கடந்த 5 நாட்களில், சென்னை மாநகர மற்றும் புறநகர் பகுதிகளில் 56.6 செ.மீ. மழை பொழிந்திருக்கின்றது. கிட்டத்தட்ட 72 சதவீத மழை இந்த 5 நாட்களில் பொழிந்திருக்கின்றது. அப்படி மழை பொழிந்திருந்தாலும், அரசு உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து, தாழ்வான பகுதியில் தேங்கியுள்ள மழைநீர் அனைத்தும் வெளியேற்றப்பட்டிருக்கின்றது.
315 இடங்களில் மழை நீர் தேங்கியிருந்ததில், தற்போது, 200 இடங்களில் தேங்கிய மழைநீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டிருக்கின்றது, மீதமுள்ள 115 இடங்களில் மழைநீரை வெளியேற்றும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அதோடு, அதிகளவில் மழைநீர் தேங்கிய பகுதிகளான, சாஸ்திரி நகர், ராஜாஜி நகர், பெரியார் நகர், வி.ஜி.பி.செல்வம் நகர், புவனேஸ்வரி நகர் போன்ற பகுதிகளில் 167 மோட்டார்கள் மூலமாக மழைநீர் வெளியேற்றும் பணி நடைபெற்று வருகின்றது. மேலும், 22 சுரங்கப்பாதைகளில் முழுவதுமாக மழைநீர் வெளியேற்றப்பட்டு வாகனங்கள் தடையில்லாமல் சென்று கொண்டிருக்கின்றன.

மழைநீரால் பாதிக்கப்பட்ட மக்களை தங்க வைப்பதற்காக, 81 முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அதில் 20 முகாம்களில் மக்கள் தங்க வைக்கப்பட்டிருக்கின்றார்கள். இந்த முகாம்களில் 2 ஆயிரத்து 161 பேர் தங்கியிருக்கின்றனர். அத்துடன் ஒரு லட்சத்து 81 ஆயிரத்து 625 உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன. இன்று (நேற்று) காலையில் மட்டும் 34 ஆயிரத்து 959 உணவுப் பொட்டலங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
இதுவரை, 512 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு, 32 ஆயிரத்து 236 நபர்கள் சிகிச்சை பெற்றுள்ளனர். அதுமட்டுமல்லாமல், ஆங்காங்கே உடனுக்குடன் சிகிச்சை அளிக்க வேண்டுமென்ற நோக்கத்தில், ஏற்கனவே 400 சிறப்பு நடமாடும் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மக்களுக்குத் தேவையான வசதிகளை அரசு செய்து கொண்டிருக்கின்றது. பொதுமக்களுக்கு தேவையான உணவு, உடை மற்றும் மருத்துவ சேவைகளெல்லாம் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. கிட்டத்தட்ட 14 ஆயிரம் டன் சேறு அள்ளப்பட்டிருக்கின்றது. 1,500 கி.மீ. தூரத்திற்கு இப்பணிகள் மேற்கொள்ளப்பட்ட காரணத்தினால், கனமழை பொழிந்தும்கூட, மழைநீர் விரைவாக வெளியேறி இருக்கிறது.

கடந்த 2 நாட்கள் மட்டுமல்லாமல், மழை வந்தவுடன் அதிகாரிகள் ஆங்காங்கே சென்று உடனுக்குடன் பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகள் நிறைவேற்றப்படுகின்றது. மழைநீரை வெளியேற்றும் பணி அரசினால் துரிதமாக எடுக்கப்பட்டு வருகின்றது.

நீர்நிலைகளில் இருக்கின்ற ஆக்கிரமிப்புகளைப் பொறுத்தவரை, ஏற்கனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள ஆணைகளை மேற்கொண்டு, அரசு ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொண்டிருக்கின்றது. அத்துடன் அகற்றப்பட்ட இடங்களில் வசித்து வந்த பொதுமக்களுக்குத் தேவையான மாற்று இடவசதி செய்து கொடுக்கப்பட்டு கொண்டிருக்கின்றது. பருவமழை காலங்கள் என்று இல்லாமல், மற்ற நேரங்களிலும், ஆக்கிரமிப்புப் அகற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கின்றது.
இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட அமைச்சர்களும், அதிகாரிகளும் உடன் இருந்தனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story