ஆதித்தனார் சிலையை சுற்றியுள்ள பகுதியை அழகுபடுத்தும் பணி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி


ஆதித்தனார் சிலையை சுற்றியுள்ள பகுதியை அழகுபடுத்தும் பணி  முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி
x
தினத்தந்தி 7 Nov 2017 4:45 AM IST (Updated: 7 Nov 2017 1:16 AM IST)
t-max-icont-min-icon

சென்னை எழும்பூரில் ஆதித்தனார் சிலையை சுற்றியுள்ள பகுதியை அழகுபடுத்தும் பணிகள் டிசம்பர் மாதத்துக்குள் முடிவடையும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி கூறினார்.

சென்னை,

‘தினத்தந்தி’ பவள விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

பாமர மக்களை பத்திரிகை படிக்கும் ஆர்வத்தை தூண்டிய தினத்தந்தி நாளிதழின் பவள விழாவில் கலந்துகொள்வதில் பெருமை கொள்கிறேன்.

பிரதமர் நரேந்திரமோடி தைரியம், அன்பு, பொறுமை ஆகியவற்றின் வடிவமாகவே திகழ்கிறார். பல தொலைநோக்கு மற்றும் சீரமைப்புத் திட்டங்களை செயல்படுத்தி இந்தியா மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்திட நடவடிக்கை எடுத்து வருகிறார்.

இந்தியாவை புதிய யுகத்திற்குக் கொண்டு செல்வார் என்று நம்பி மக்கள் வழங்கிய பொறுப்பினை நிறைவேற்றும் வகையில் பிரதமர் நமது திருநாட்டிற்காக அல்லும்பகலும் அயராது பாடுபட்டு வருகிறார். இத்தகைய பெருமைமிக்க நமது பிரதமர் முன்னிலையில் இந்த விழா நடைபெறுவது என்பதை ஒரு வரலாற்று நிகழ்வாகவே நான் கருதுகிறேன்.

இந்த நாளிதழின் இயக்குநர் பாலசுப்பிரமணியன் ஆதித்தன், தனது பாட்டனார் சி.பா.ஆதித்தனாரைப் போலவும், தனது தந்தை சிவந்தி ஆதித்தனாரைப் போலவும், கடுமையாக உழைத்து லட்சக்கணக்கான வாசகர்களைக் கொண்ட இந்த நாளிதழை, தொடர்ந்து முதல்நிலை நாளேடாக நடத்தி வரும் பெருமைக்குரியவர். இவர் தொடர்ந்து இந்தத் துறையில் சிறந்த சாதனை படைத்து இந்த நாளிதழின் பெருமையையும், சிறப்பையும், நூற்றாண்டையும் கடந்து மேன்மேலும் வளர்ப்பார் என நான் உறுதியாக நம்புகிறேன்.

ஜனநாயகத்தின் நான்கு தூண்களாக இருப்பது ஆட்சி அதிகாரம், அரசு நிர்வாகம், நீதி பரிபாலனம் மற்றும் பத்திரிகைகள் ஆகும். பத்திரிகை துறை ஜனநாயகத்தின் 4-வது தூணாக விளங்கிக் கொண்டிருக்கிறது. நியூஸ் என்றால் நார்த் (வடக்கு), ஈஸ்ட் (கிழக்கு), வெஸ்ட் (மேற்கு), சவுத் (தெற்கு) என்று 4 திசைகளைக் குறிப்பதாகும்.

அதாவது உலகின் 4 திசைகளிலும் நடைபெறும் அன்றாடச் செய்திகளை உடனடியாக, உண்மையாக மற்றும் உணர்வுபூர்வமாக மக்களிடம் கொண்டு செல்லும் பணியை ஆற்றுவது பத்திரிகைகள் தான். மக்களின் நாடி நரம்புகளை பிடித்துப் பார்த்து, அவர்களின் எண்ணங்களை சம்பந்தப்பட்டவர்களின் கவனத்திற்கு எடுத்துச் செல்லும் ஒரு அமைப்பாக செயல்படுவது பத்திரிகைத் துறை தான். நாட்டில் ஜனநாயகம் தழைத்தோங்க அரசாங்கமும், பத்திரிகைத் துறையும் வண்டியின் இருசக்கரங்கள் போல இணைந்து செயல்பட வேண்டும்.

படித்தவர்களும், வசதி படைத்தவர்களும் மட்டுமே நாளிதழை படித்துக் கொண்டிருந்த காலத்தில், படிக்காத பாமர மக்களும் நாட்டு நடப்பை அறிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் முதலில் ‘தமிழன்’ என்ற வார இதழை சி.பா.ஆதித்தனார் தொடங்கினார். பின்னர் அவரே, 15-10-1942-ல் முதன் முதலாக மதுரையில் ‘அன்றைய செய்தியை அன்றே படியுங்கள்’ என்ற முழக்கத்துடன் “தந்தி” என்ற பெயரில் ஒரு நாளிதழை தொடங்கினார்.

சென்னைக்கு வெளியே தொடங்கப்பட்ட முதல் நாளிதழ் இதுதான். பின்னர் இதுவே, 1943-ம் ஆண்டு சென்னையில் “தினத்தந்தி” என்ற பெயரில் தொடங்கப்பட்டது. இந்தப் பத்திரிகையின் மூலம் தமிழ்நாட்டில் வாசிப்புப் பழக்கம் அதிகரிக்க வழிவகுத்தார். அடிப்படை எழுத்தறிவு பெற்றவர்கள்கூட, செய்தி வாசிக்கும் பழக்கம் ஏற்பட இவரது முயற்சிகள் வழிவகுத்தன.

இதுமட்டுமல்லாமல், படிப்பறிவு இல்லாத பாமர மக்கள் கூட எழுத்துக்கூட்டி படிக்க ஆரம்பித்தது, இவரது எளிய தமிழ் நடைக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.

‘மாதம் ஒரு நாவல்’ என்னும் நோக்கத்தின் கீழ் ‘ராணி முத்து’ என்னும் புத்தகத்தை ஒவ்வொரு மாதமும் வெளியிட்டு தமிழ் பத்திரிகை உலகில் ஒரு புதிய அத்தியாயத்திற்கு சி.பா.ஆதித்தனார் வித்திட்டார். இதன் மூலம் வாசகர்கள் கதைகளையும் படிக்க ஆரம்பித்தனர். இதனால் இது வெகுஜன பத்திரிகையாக வலம் வர ஆரம்பித்தது.

“தந்தை மகனுக்கு ஆற்றும் உதவி அவையத்து முந்தி இருப்பச் செயல்” என்ற வள்ளுவரின் குறளுக்கு ஏற்றவாறு சிவந்தி ஆதித்தனாரை சி.பா.ஆதித்தனார் வளர்த்தார். அதன் அடிப்படையில், தினத்தந்தி நாளிதழின் பொறுப்பினை சிவந்தி ஆதித்தனாருக்கு அளித்தார்.

‘மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை எந்நோற்றான் கொல் எனும் சொல்’ என்ற வள்ளுவரின் கூற்றின்படி தனது தந்தைக்கு பெருமை சேர்க்கும் வகையில், தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட ‘தினத்தந்தி’ நாளிதழின் பதிப்புகளின் எண்ணிக்கையை பன்மடங்காக உயர்த்தினார் சிவந்தி ஆதித்தனார்.

இவரது நிர்வாகத் திறமையின் காரணமாக, ‘தினத்தந்தி’ நாளிதழ் தமிழ்நாட்டிலேயே அதிக விற்பனை உள்ள நாளிதழ் என்ற பெருமையை தொடர்ந்து பல ஆண்டுகளாக தக்கவைத்துக் கொண்டு வருகிறது. இவர் தமிழ்நாட்டிலேயே பிற்பட்ட பகுதியான திருச்செந்தூர் பகுதியில் பல கல்வி நிறுவனங்களை நிறுவி, அப்பகுதியில் உள்ள ஏழை மக்களும் கல்வி கற்க வழிவகை செய்தார். இவர் பத்திரிகைத் துறை மட்டுமின்றி விளையாட்டு, கல்வி, தொழில் போன்ற பல்வேறு துறைகளில் சாதனை படைத்துள்ளார்.

ஜெயலலிதாவின் ஆட்சி காலத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் துணைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். இலக்கியம் மற்றும் கல்வித்துறையில் சிறந்த சேவை புரிந்ததற்காக கடந்த 2008-ம் ஆண்டில் மத்திய அரசு இவருக்கு ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கி கவுரவித்தது.

ஒரு தினசரி பத்திரிகையில் செய்திகள் மட்டும் இருந்தால் போதாது; பொழுதுபோக்கு பகுதிகளும் இருக்கவேண்டும். அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளில் அப்படித்தான் தினசரி பத்திரிகைகள் வெளியிடப்படுகின்றன. தமிழ்நாட்டில் அந்த முறையை முதன் முதலில் புகுத்திய பெருமை தினத்தந்தியைச் சாரும்.

இந்தப் பத்திரிகையின் வெள்ளி விழாவில் கலந்துகொண்டு பேரறிஞர் அண்ணா பேசுகையில், “வீட்டில் ஒரு வானொலி பெட்டகம் இருந்தால் எப்படி உலக செய்திகளில் இருந்து கலை, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் வரை கேட்டு ரசிக்கிறோமோ, அப்படிப்பட்ட அனுபவத்தை ‘தினத்தந்தி’ நாளேட்டை படிக்கும் லட்சக்கணக்கான மக்கள் பெறுகிறார்கள்” என்று பாராட்டினார்.

“தமிழனுடைய உரிமை பறிக்கப்படும் என்ற நிலை ஏற்படுகின்ற ஒவ்வொரு நேரத்திலும் தமிழர்கள் தங்களை பாதுகாத்துக் கொண்டு தீரவேண்டும் என்று கட்டாயம் வரும் ஒவ்வொரு நேரத்திலும் தினத்தந்தி நாளிதழ் வெறும் செய்திப் பத்திரிகையாக மட்டும் இல்லாமல் தமிழர்களுக்கு வாளாகவும், கேடயமாகவும், தமிழர் உரிமையை பாதுகாக்கக் கூடிய ஒரு போர் வீரனாகவும் விளங்கிக்கொண்டு வருகிறது” என்றும் பேரறிஞர் அண்ணா கூறினார்.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். 24-5-1987 அன்று சென்னையில் சி.பா.ஆதித்தனாரின் உருவச் சிலையை திறந்து வைத்து, “ஆதித்தனார் அமைத்த நிறுவனங்களை அவருடைய மகன் சிவந்தி ஆதித்தன் கட்டிக்காத்து வருவதுடன், மெச்சத் தகுந்த வழியில் வளர்த்து வருகிறார்” என்று பாராட்டினார்.

தினத்தந்தி நாளிதழின் சிறப்பையும், நடுநிலைமையையும் அங்கீகரித்து ஜெயலலிதா 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்காக வெளியிட்ட அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையின் முதல் பிரதியை தினத்தந்தி நிருபரிடம் வழங்கினார். சென்னை எழும்பூரில் எம்.ஜி.ஆரால் திறந்து வைக்கப்பட்ட ஆதித்தனாருடைய உருவச் சிலையை சுற்றியுள்ள பகுதியில் அமைந்துள்ள போக்குவரத்து பூங்காவை மேம்படுத்துவதற்காக தற்காலிகமாக தினத்தந்தி நிர்வாகத்திடம் அந்த உருவச் சிலை ஒப்படைக்கப்பட்டது.

அன்னாரது பிறந்த நாளான 27-9-2017 அன்று பொதுமக்கள் கலந்துகொள்ளும் வகையில் அந்த உருவச்சிலை மீண்டும் அதே இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், பீடத்தை சுற்றியுள்ள பகுதியினை அழகுபடுத்தும் பணிகளை வரும் டிசம்பர் மாதத்திற்குள் சென்னை பெருநகர மாநகராட்சி முடிக்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

தினத்தந்தி பத்திரிகையானது தனது எழுத்துப் பணியினை பல நூற்றாண்டுகள் தொடர வாழ்த்துகிறேன்.

மரம் தனக்காக பழம் தருவதில்லை; ஆறு தனக்காக ஓடுவதில்லை; காற்று தனக்காக வீசுவதில்லை; சூரியன் தனக்காக ஒளி வீசுவதில்லை; மழை தனக்காக பொழிவதில்லை; ஞானிகளும் தனக்காக வாழ்வதில்லை. அதுபோல அனைத்து பத்திரிகைகளும் தன்னலம் கருதாமல் நடுநிலைமையுடன் செயல்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டு இந்த நிகழ்ச்சியில் என்னை அழைத்தமைக்காக தினத்தந்தி நிர்வாகத்திற்கும், இச்சிறப்புமிகு விழாவில் கலந்துகொள்ள டெல்லியில் இருந்து வந்திருக்கும் பிரதமர் நரேந்திரமோடிக்கும், நிகழ்ச்சியில் பங்குபெற்ற அனைவருக்கும், விழா குழுவினருக்கும் எனது மனமார்ந்த நன்றியைக் கூறி விடைபெறுகிறேன்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார். 

Next Story