ஜெயலலிதா வீட்டுக்கு பாதுகாப்பு குறைப்பு ஐகோர்ட்டில் அரசு தகவல்


ஜெயலலிதா வீட்டுக்கு பாதுகாப்பு குறைப்பு ஐகோர்ட்டில் அரசு தகவல்
x
தினத்தந்தி 7 Nov 2017 5:00 AM IST (Updated: 7 Nov 2017 1:27 AM IST)
t-max-icont-min-icon

ஜெயலலிதாவின் வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர்களின் எண்ணிக்கை 50-ல் இருந்து 15 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

சென்னை, 
போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர்களின் எண்ணிக்கையை 50-ல் இருந்து 15 ஆக குறைக்கப்பட்டு விட்டதாக ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

ஜெயலலிதா வீடு

பொது இடங்களில் புகைப்பிடிப்பதையும், பள்ளி, கல்லூரிகள் அருகே சிகரெட், குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதையும் எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், ‘புகையிலை பொருட்களை விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க போலீஸ்காரர்கள் போதிய எண்ணிக்கையில் இல்லை என்று அரசு தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், போயஸ் கார்டனில் உள்ள மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வீட்டிற்கு பாதுகாப்பு வழங்க அதிக எண்ணிக்கையில் போலீஸ்காரர்களை பயன்படுத்துவது ஏன்?’ என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

போதைக்கு அடிமை

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு அட்வகேட் ஜெனரல் வெங்கட்ரமணி ஆஜராகி, போயஸ் தோட்டத்தில் பாதுகாப்பு பணியில் 50 போலீஸ்காரர்கள் ஈடுபட்டனர். தற்போது, அந்த எண்ணிக்கை 15 ஆக குறைக்கப்பட்டுவிட்டது என்று கூறினார்.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

பஞ்சாப் மாநிலத்தில் போதைக்கு பலர் அடிமையாகி விட்டனர். எனவே, இளைய தலைமுறையினர் போதைக்கு அடிமையாவதை தடுக்க பஞ்சாப் மாநில அரசு சிறப்பு நடவடிக்கைகளை எடுத்தது. அங்குள்ள பள்ளிக் கூடங்கள், கல்லூரிகளை கண்காணித்தது. போதை பொருட்களை விற்பனை செய்வோர் மட்டுமல்லாமல், அதை பயன்படுத்துவோர் மீதும் நடவடிக்கை எடுத்தது. இதனால், போதை பொருட்களை பயன்படுத்துவோர் மத்தியில் ஒரு அச்சம் ஏற்பட்டது.

திரைப்பட நட்சத்திரங்கள்

ஐதராபாத்தில் போதை பொருட்களை பயன்படுத்தும் திரைப்பட நட்சத்திரங்கள் மீது அம்மாநில போலீசார் கடும் நடவடிக்கை எடுத்தனர். அந்த திரைப்பட பிரமுகர்களை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அவர்களை கைது செய்தனர். அதுபோன்ற நடவடிக்கையை தமிழக அரசும் எடுக்க வேண்டும். மேலும், போயஸ் கார்டனில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்ட 50 போலீஸ்காரர்களின் எண்ணிக்கையை 15 ஆக குறைத்து விட்டதாக கூடுதல் அட்வகேட் ஜெனரல் கூறியுள்ளார். எனவே, அந்த 35 போலீஸ்காரர்களை சட்டம்- ஒழுங்கு பராமரித்தல், குற்ற வழக்கை புலனாய்வு செய்தல், குறிப்பாக போதை பொருள் விற்பனையை தடுத்தல் போன்ற பணிக்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு நீதிபதி தன் உத்தரவில் கூறியுள்ளார். 

Next Story