நடுவானில் தம்பதிகள் சண்டையால் சென்னை விமான நிலையத்தில் தரை இறக்கபட்ட கத்தார் விமானம்


நடுவானில் தம்பதிகள் சண்டையால் சென்னை விமான நிலையத்தில் தரை இறக்கபட்ட கத்தார் விமானம்
x
தினத்தந்தி 7 Nov 2017 5:49 PM IST (Updated: 7 Nov 2017 5:49 PM IST)
t-max-icont-min-icon

நடுவானில் தம்பதிகள் சண்டையால் கத்தார் விமானம் சென்னை விமான நிலையத்தில் தரை இறக்கப்பட்டது

ஈரான் நாட்டை சேர்ந்த ஒரு இளம் தம்பதி தங்கள் பச்சிளம் குழந்தையுடன் தோஹா நகரில் இருந்து இந்தோனேசியாவுக்கு கத்தார் நாட்டு விமானத்தில் பயணம் செய்தனர்.

இரவு  நடுவானில் விமானம் பறந்து கொண்டு இருந்த போது  தூங்கி கொண்டிருந்த கணவனை எழுப்பி மனைவி  அவ யாரு? எத்தனை நாளா இது நடக்குது..? என்று ஆவேசமாக  அவருடன் சண்டை போட்டு உள்ளார்.  அரைகுறை தூக்கத்திலும் நிலைமையை புரிந்து கொண்ட  கணவன் என் செல்போனை நீ ஏன் எடுத்தாய்? என்று கேட்டு தகராறு செய்ய சண்டை ஆக்ரோஷம் ஆனது. தூக்கத்தில் இருந்த பயணிகள் கண்விழித்தனர். விமானத்தில் விளக்குகள் எரியவிடப்பட்டது.

விமான பணிப்பெண்கள், பைலட் ஆகியோர் சென்று இருவரையும் சமாதானம் செய்தனர். ஆனால் சண்டை நின்றபாடில்லை. இதனால் மற்ற பயணிகள் தூங்க முடியாமல் சிரமப்பட்டனர். வேறு வழியில்லாமல் பைலட்டுகள் வான் போக்கு வரத்து கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு நிலைமையை தெரிவித்தனர். அப்போது அந்த விமானம் சென்னையின் மேல் பறந்து கொண்டிருந்தது.

உடனே அந்த விமானத்தை சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரை இறக்க அனுமதித்தனர். இதையடுத்து இரவு 10.15 மணிக்கு அந்த விமானம் தரை இறங்கியது. பாதுகாப்பு அதிகாரிகள் அந்த தம்பதியை இறக்கி குடியுரிமை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இரவு 12.10 மணிக்கு அந்த விமானம் பாலி நகருக்கு புறப்பட்டு சென்றது.

கள்ளக்காதல் விவகாரத்தால் நடந்த சண்டை மற்றும் தம்பதிகள் விமானத்தில் இருந்து இறக்கப்பட்டது பற்றி டெல்லியில் உள்ள ஈரான் தூதரகத்துக்கு தகவல் கொடுத்தனர். அதிகாரிகள் அந்த தம்பதியிடம் பேசி சமரசம் செய்து கோலாலம்பூர் வழியாக செல்லும் வேறு விமானத்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.  

Next Story