பேராசிரியர் நன்னன் மறைவு: “தமிழ் இலக்கிய உலகுக்கு பேரிழப்பு” எடப்பாடி பழனிசாமி இரங்கல்


பேராசிரியர் நன்னன் மறைவு: “தமிழ் இலக்கிய உலகுக்கு பேரிழப்பு” எடப்பாடி பழனிசாமி இரங்கல்
x
தினத்தந்தி 8 Nov 2017 2:30 AM IST (Updated: 8 Nov 2017 12:46 AM IST)
t-max-icont-min-icon

“பேராசிரியர் நன்னனின் மறைவு தமிழ் இலக்கிய உலகுக்கு பேரிழப்பு”, என்று எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்து உள்ளார்.

சென்னை,

பேராசிரியர் நன்னன் மறைவு குறித்து தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

சிறந்த தமிழறிஞரும், எழுத்தாளருமான மா.நன்னன் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயரம் அடைந்தேன்.

தொடக்கப்பள்ளி ஆசிரியராகத் தனது தமிழ்ப் பணியைத் தொடங்கிய நன்னன் முனைவர் பட்டம் பெற்று, கலைக் கல்லூரி, மாநிலக் கல்லூரி உள்ளிட்ட பல கல்லூரிகளில் தமிழ் பேராசிரியராக பணியாற்றினார். மேலும், தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனராக பணியாற்றியதோடு, எழுத்தறிவித்தலில் ‘நன்னன் முறை’ என்ற புதிய முறையை உருவாக்கிய பெருமைக்குரியவர் ஆவார்.

‘தவறின்றி தமிழ் எழுதுவோம்’, ‘எல்லார்க்கும் தமிழ்’ உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்ட நூல்களை நன்னன் எழுதியுள்ளார். தனது எழுத்துப் பணிக்காக ‘பெரியார் விருது’, ‘தமிழ்ச் செம்மல் விருது’, ‘திரு.வி.க. விருது’ போன்ற விருதுகளையும் நன்னன் பெற்றுள்ளார்.

தமிழ் மொழி மேல் நீங்கா பற்றுக் கொண்டவரும், அனைவரிடமும் அன்பாக பழகக்கூடிய பண்பாளருமான நன்னனின் மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு பேரிழப்பாகும். நன்னனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், தமிழ் இலக்கியத்துறை நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story