“நன்னனின் மறைவு தமிழ் இனத்துக்கு ஏற்பட்ட பேரிழப்பு” மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி


“நன்னனின் மறைவு தமிழ் இனத்துக்கு ஏற்பட்ட பேரிழப்பு” மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி
x
தினத்தந்தி 8 Nov 2017 2:15 AM IST (Updated: 8 Nov 2017 12:48 AM IST)
t-max-icont-min-icon

“நன்னனின் மறைவு தமிழ் இனத்துக்கு ஏற்பட்ட பேரிழப்பு”, என்று மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

பேராசிரியர் மா.நன்னன் மறைவுக்கு, தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மூத்த தமிழறிஞரும், முனைவருமான மா.நன்னன் இயற்கை எய்தினார் என்ற செய்தி இடிதாக்குவது போலவும், காதுகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுவது போலவும் தாங்கமுடியாத வேதனையை ஏற்படுத்துகிறது. தமிழ் வளர்ச்சிக்காக வாழ்நாள் முழுவதும் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட நன்னன் தனது 94 வயதில் மறைந்திருக்கிறார்.

வாழ்நாள் முழுவதும் பகுத்தறிவு மிக்க தமிழறிஞராக, திராவிட இயக்க செயற்பாட்டாளராக, மேடைகளில் தி.மு.க. கரைவேட்டியுடன் பங்கேற்கக்கூடிய கொள்கை பற்றாளராகத் திகழ்ந்தவர் நன்னன். தி.மு.க. தலைவர் கருணாநிதியை என்றும் மதிக்கும் தொண்டராக, அன்புக்குரிய நண்பராக, மொழிகாக்கும் உரிமைப்போரில் உற்ற தோழனாகத் திகழ்ந்தவர்.

தி.மு.க.வில் இளைஞரணி தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து, அதன் தொடர்ச்சியான பயணங்களில் எல்லாம் பலமுறை நன்னன் கொள்கை வகுப்பெடுத்து, தமிழ் உணர்வு ஊட்டியது இன்றும் என் நெஞ்சில் பசுமையாக நினைவில் உள்ளது. அவர் ஊட்டிய உணர்வு இளைஞரணியின் விரைவானப் பயணத்திற்குத் துணை நின்றது.

கருணாநிதி தலைமையிலான தி.மு.க. ஆட்சியில், நன்னனுக்கு ‘தந்தை பெரியார் விருது’, ‘திரு.வி.க. விருது’ உள்ளிட்ட பல உயர் விருதுகள் வழங்கப்பட்டன. சமீபத்தில் நன்னனை அவரது இல்லத்தில் சென்று சந்தித்து, ‘முரசொலி’ பவளவிழா மலரை வழங்கினேன். அந்த இனிய நினைவுகள் இன்னும் இதயத்தை விட்டு அகலாத நிலையில், அவர் இந்த உலகை விட்டு மறைந்து விட்டார் என்ற செய்தி அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்துகிறது.

நன்னன் மறைவால் வாடும் அவரது குடும்பத்தாருக்கும், தமிழ்ச் சான்றோர்களுக்கும் தி.மு.க. சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்னனின் இழப்பு தமிழ் இனத்திற்கும், இயக்கத்திற்கும் ஏற்பட்டுள்ள பேரிழப்பு. அந்த இழப்பினை ஈடுசெய்யும் வகையில், அவர் வழியில் நடைபோடுவதே நாம் அவருக்கு செலுத்தும் சீரிய அஞ்சலி.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Next Story