கொடநாடு காவலாளி கொலை வழக்கு: 5 பேர் மீதான குண்டர் சட்டத்தினை ரத்து செய்தது உயர் நீதிமன்றம்


கொடநாடு காவலாளி கொலை வழக்கு:  5 பேர் மீதான குண்டர் சட்டத்தினை ரத்து செய்தது உயர் நீதிமன்றம்
x
தினத்தந்தி 8 Nov 2017 1:28 PM IST (Updated: 8 Nov 2017 1:28 PM IST)
t-max-icont-min-icon

கொடநாடு காவலாளி கொலை வழக்கில் 5 பேர் மீதான குண்டர் சட்டத்தினை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ளது. இந்த எஸ்டேட்டில், காவலாளியாக பணியாற்றி வந்தவர் ஓம்பகதூர்.  இவர் கடந்த ஏப்ரல் 24-ம் தேதி மர்ம நபர்களால் கொலைசெய்யப்பட்டார்.

இந்த சம்பவத்தில் மற்றொரு காவலாளி கிருஷ்ணபகதூர், பலமாக தாக்கப்பட்டார். கொலை வழக்கில் தேடப்பட்டுவந்த சசிகலாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ், ஏப்ரல் மாதம் 28-ம் தேதி சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகில் இருசக்கர வாகனத்தில் கார் மோதி உயிரிழந்தார்.

அதன்பின்னர், ஏப்ரல் 29-ம் தேதி, மற்றொரு முக்கிய குற்றவாளியான கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த சயான், தன் குடும்பத்தினருடன் காரில் தப்பிச்செல்வதாக தனிப்படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சயானை பிடிக்க தனிப்படையினர் காரில் விரைந்தனர். அப்போது, சாலையோரத்தில் நின்றுகொண்டிருந்த லாரி மீது சயானின் கார் பயங்கரமாக மோதியது. இதில், சயானின் மனைவி வினுப்பிரியா, 5 வயது குழந்தை நீத்து ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தில் பலத்த காயம் அடைந்த சயான் உடனடியாக கோவை கொண்டு செல்லப்பட்டு, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் அவரை போலீசார் கைது செய்தனர்.  சயானின் மனைவி மற்றும் 5 வயது குழந்தை மரணத்தில் கொலை எதுவும் நடைபெறவில்லை என தெரிய வந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கில் உதயன், தீபு, சதீஷன், மனோஜ், பிஜின் ஆகிய 5 பேர் மீது குண்டர் சட்ட உத்தரவை கடந்த ஜூன் 17ந்தேதி நீலகிரி ஆட்சியர்  பிறப்பித்துள்ளார்.

இந்த குண்டர் சட்ட உத்தரவுக்கு எதிராக 5 பேரின் உறவினர்கள் மனு தாக்கல் செய்திருந்தனர்.  இந்த மனு மீது ஆட்சியர் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் 5 பேர் மீது ஆட்சியர் பிறப்பித்த குண்டர் சட்ட உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் இன்று ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

Next Story