தேசிய தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத 1,025 பேர் வக்கீல் தொழிலில் இருந்து இடைநீக்கம்


தேசிய தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத 1,025 பேர் வக்கீல் தொழிலில் இருந்து இடைநீக்கம்
x
தினத்தந்தி 9 Nov 2017 3:45 AM IST (Updated: 9 Nov 2017 1:03 AM IST)
t-max-icont-min-icon

தேசிய தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத 1,025 பேர் வக்கீல் தொழிலில் இருந்து இடைநீக்கம்

சென்னை,

தேசிய தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத 1,025 பேரை வக்கீல் தொழிலில் இருந்து இடைநீக்கம் செய்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.

தகுதித்தேர்வு

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடந்த போரில் பல அப்பாவி தமிழர்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இதை கண்டித்து சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வக்கீல்களுக்கும், போலீசாருக்கும் மோதல் ஏற்பட்டது. இதன் விளைவாக வக்கீல்கள் மீது கடந்த 2009-ம் ஆண்டு பிப்ரவரி 19-ந் தேதி போலீசார் தடியடி நடத்தினார்கள்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, சட்டப்படிப்பை முடித்து வக்கீலாக பதிவு செய்பவர்களுக்கு, தேசிய தகுதித்தேர்வை நடத்த வேண்டும் என்றும், வக்கீலாக பதிவு செய்த நாளில் இருந்து 2 ஆண்டுகளுக்குள் இந்த தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும் என்றும் புதிய விதிகள் கொண்டுவரப்பட்டன.

சுற்றறிக்கை

இதன்படி, வக்கீலாக பதிவு செய்பவர்களுக்கு தகுதித்தேர்வு அகில இந்திய அளவில் நடத்தப்படுகிறது. ஆனால், கடந்த 2014 மற்றும் 2015-ம் ஆண்டுகளில் வக்கீலாக பதிவு செய்தவர்களில் 1,025 பேர் இந்த தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறவில்லை.

இதையடுத்து, இவர்களை வக்கீல் தொழிலில் இருந்து இடைநீக்கம் செய்து பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் செயலாளர் சி.ராஜகுமார், அனைத்து வக்கீல் சங்கங்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

1,025 பேர் இடைநீக்கம்

அதில், ‘தேசிய தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத வக்கீல்களை உடனடியாக இடைநீக்கம் செய்யவேண்டும் என்றும், அவ்வாறு இடைநீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு வக்கீல்களுக்கான சேமநல நிதியை பெறவும், பார் கவுன்சிலில் ஓட்டு போடவும் உரிமை இல்லை என்றும் கடந்த 2015-ம் ஆண்டு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்த தகுதித்தேர்வில் 2 ஆண்டுகளுக்குள் தேர்ச்சி பெறவேண்டும். ஆனால், கடந்த 2014, 2015-ம் ஆண்டுகளில் வக்கீலாக பதிவு செய்த 1,025 பேர் தேசிய தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. எனவே, இந்த 1,025 பேர் இடைநீக்கம் செய்யப்படுகின்றனர். இந்த உத்தரவை மீறி இவர்களில் யாராவது வக்கீல் தொழிலில் ஈடுபட்டால், முன்னறிவிப்பு எதுவுமின்றி அவர்கள் நிரந்தரமாக வக்கீல் தொழிலில் இருந்து நீக்கப்படுவார்கள்’ என்று கூறி உள்ளார்.

போலிச் சான்றிதழ்

மேலும், இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நபர்களின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில், தன்னுடைய இணையதளத்திலும் வெளியிட்டுள்ளது.

இதுதவிர அண்மையில் வக்கீலாக பதிவு செய்த 2 பேர், போலி கல்விச் சான்றிதழை கொடுத்திருப்பதும் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து பார் கவுன்சில் செயலாளர் சி.ராஜகுமார், சென்னை போலீஸ் கமிஷனரிடம் தனித்தனியாக புகார் செய்துள்ளார். அதில், நாமக்கல், முல்லை நகரை சேர்ந்த எம்.குமரன், மதுரை விளாங்குடியை சேர்ந்த ஜி.மோகன் ஆகியோர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.ஏ. பட்டப்படிப்பை முடித்துள்ளதாக சான்றிதழ்களை கொடுத்துள்ளனர். இந்த சான்றிதழ்களை, அந்த பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி விசாரித்தபோது, அவை போலியானது என்று தெரிய வந்தது. எனவே, போலிச் சான்றிதழ் கொடுத்து வக்கீலாக பதிவு செய்த இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

வழக்குப்பதிவு

இந்த 2 புகார்களையும் பெற்றுக்கொண்ட, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், இதுகுறித்து தனித்தனியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும், திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று, சட்டப்படிப்பை முடித்தவர்கள் வக்கீலாக பதிவு செய்ய முடியாது. ஆனால், திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று பல ஆயிரம் பேர் வக்கீலாக பதிவு செய்துள்ளனர்.

இவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக சுமார் 700 பேர் வக்கீல் தொழிலில் இருந்து விரைவில் இடைநீக்கம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

Next Story