செவிலியர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்க வேண்டும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை
செவிலியர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்க வேண்டும் என டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னை,
பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
தமிழ்நாடு முழுவதும் ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்தப்பட்ட பல்லாயிரக்கணக்கான செவிலியர்கள் தங்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு வாரத்திற்கும் மேலாக அறப்போராட்டம் நடத்தியுள்ளனர். ஆனால், அவர்களின் கோரிக்கைகள் குறித்து பேச்சு நடத்துவதற்கு கூட தமிழக ஆட்சியாளர்கள் அழைப்பு விடுக்க மறுப்பது கண்டிக்கத்தக்கது.
உச்சநீதிமன்ற ஆணைப்படி அமைக்கப்பட்ட வல்லுனர் குழு அளித்த பரிந்துரைகளின்படி, சிறிய தனியார் மருத்துவமனைகளில் குறைந்தபட்ச மாத ஊதியமாக 20,000 ரூபாயும், 200 படுக்கைகளுக்கு மேல் உள்ள மருத்துவமனைகளின் செவிலியர்களுக்கு அரசு செவிலியர்களுக்கு இணையான ஊதியமும் வழங்கப்பட வேண்டும். தனியார் மருத்துவமனைகளுக்கான இந்த பரிந்துரையை செயல்படுத்தும்படி தமிழக அரசுக்கு மத்திய அரசு ஆணையிட்டுள்ள நிலையில், அரசு மருத்துவமனைகளிலேயே ஒப்பந்த முறை செவிலியர்களை குறைந்த ஊதியத்தில் கொத்தடிமை போன்று வேலைவாங்குவது சரியாகுமா?
சட்டப்பேரவை உறுப்பினர்கள் கோரிக்கை விடுப்பதற்கு முன்பே அவர்களுக்கு இரு மடங்கு ஊதியம் உயர்வு வழங்கிய தமிழக அரசு, ஒப்பந்த முறை செவிலியர்கள் மற்றும் தற்காலிக செவிலியர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்க மறுப்பது நியாயமல்ல. அவர்கள் அனைவருக்கும் பணி நிலைப்பு வழங்கி காலமுறை ஊதியம் வழங்குவதுடன், சொந்த மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story