சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு அடுத்த ஆண்டு நடத்தப்படும் அமைச்சர் எம்.சி.சம்பத் தகவல்


சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு அடுத்த ஆண்டு நடத்தப்படும் அமைச்சர் எம்.சி.சம்பத் தகவல்
x
தினத்தந்தி 10 Nov 2017 3:30 AM IST (Updated: 10 Nov 2017 1:05 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு அடுத்த ஆண்டு (2018) நடத்த திட்டமிட்டு உள்ளதாக அமைச்சர் எம்.சி.சம்பத் கூறினார்.

சென்னை,

சென்னை வர்த்தக மையத்தில் தானியங்கி பொறியியல் கண்காட்சி நேற்று தொடங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியை தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் பேசியதாவது:-

சிறந்த மனித ஆற்றல், எளிமையான தொழில் திட்டங்கள், வளர்ச்சி அடைந்த தொழிற்பேட்டைகளில் இடவசதி, சிறந்த உள்கட்டமைப்பு, அருமையான துறைமுகங்கள் என பல வசதிகள் இருப்பதால் தமிழகம் தொழில் தொடங்க உகந்த மாநிலங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

தொழிற்சாலைகள், பணியாளர்கள் எண்ணிக்கையில் தமிழகம் முதல் இடத்தை வகிக்கிறது. கார் உற்பத்தியை முதலில் தொடங்கியது தமிழ்நாடு தான். வாகன உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் தமிழகம் முன்னணி வகிக்கிறது.

தமிழகத்தில் ஆண்டு ஒன்றுக்கு 1 லட்சத்து 42 ஆயிரம் கார்கள், 3 லட்சத்து 61 ஆயிரம் வர்த்தக வாகனங்கள் தயாரிக்கும் வசதிகள் உள்ளன. இந்தியாவில் வாகன ஏற்றுமதியில் தமிழகம் 60 சதவீத பங்கை கொண்டுள்ளது. ஆட்டோமொபைல் துறையில் உலகின் 10 முன்னணி நகரங்களுள் ஒன்றாக சென்னை திகழ்கிறது.

கடந்த 2015-ம் ஆண்டு நடத்தப்பட்ட சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு பெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து மீண்டும் அடுத்த ஆண்டு (2018) இந்த மாநாட்டை சென்னையில் நடத்த திட்டமிட்டு உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் தமிழக அரசின் தொழில்துறை வழிகாட்டி மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவன துணைத்தலைவர் ஷில்பா பிரபாகர், சிப்காட் நிர்வாக இயக்குனர் வாசுகி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story