கடலோர மாவட்டங்களில் 4 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு வானிலை மையம் தகவல்


கடலோர மாவட்டங்களில் 4 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு வானிலை மையம் தகவல்
x
தினத்தந்தி 11 Nov 2017 5:15 AM IST (Updated: 11 Nov 2017 12:39 AM IST)
t-max-icont-min-icon

கடலோர மாவட்டங்களில் 4 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில் 4 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய பிறகு தொடர்ந்து 10 நாட்களாக மிதமான மழை முதல் கனமழை வரை பெய்தது. சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளிலும் நீர்மட்டம் கணிசமான அளவு உயர்ந்தது. தொடர்ந்து மழை பெய்து வந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது. பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டது.

கடந்த 2 நாட்களாக மழை ஓய்ந்திருந்த நிலையில் சென்னையில் நேற்று காலை முதலே வானில் கருமேகம் சூழ்ந்து காணப்பட்டது. வேப்பேரி, புரசைவாக்கம், அடையார், தரமணி, திருவான்மியூர், மேற்கு மாம்பலம், போரூர், கோயம்பேடு, அண்ணாநகர், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, புழுதிவாக்கம், கொடுங்கையூர், பெரம்பூர் உள்பட பல இடங்களில் மீண்டும் லேசான மழை பெய்தது.

இந்த நிலையில் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது:-

தென் கிழக்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து தென் மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் 5 செ.மீ. மழை பெய்துள்ளது. மயிலாடியில் 4 செ.மீ. மழை பெய்துள்ளது.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் 3 செ.மீ. மழையும், தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் 2 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது. நெல்லை மாவட்டம் பாபநாசம், நாங்குநேரி, செங்கோட்டை, நாகை மாவட்டம் தரங்கம்பாடி, கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் ஆகிய இடங்களில் தலா ஒரு செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் விட்டு விட்டு மழை பெய்யும். ஒரு சில நேரங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

வடகிழக்கு பருவமழை பெய்ய தொடங்கியது முதல் இன்று (நேற்று) வரை தமிழகத்தில் 24 செ.மீ. மழை பெய்துள்ளது. இயல்பான மழையளவு 26 செ.மீ. ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை வானிலை ஆய்வு மைய இணையதளத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 4 நாட்களுக்கான வானிலை முன் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, 11-ந் தேதி (இன்று) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் கடலோர மாவட்டங்களிலும், உள் மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 12-ந் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழையும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும் பெய்ய உள்ளது.

13-ந் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில் கனமழையும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. 14-ந் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 11-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில முறை மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய கூடும். சில சமயங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story