கடல் கடந்த காதல் கனிந்தது: கோவில்பட்டி என்ஜினீயர்- ஜெர்மனி பெண் திருமணம்


கடல் கடந்த காதல் கனிந்தது: கோவில்பட்டி என்ஜினீயர்- ஜெர்மனி பெண் திருமணம்
x
தினத்தந்தி 11 Nov 2017 3:30 AM IST (Updated: 11 Nov 2017 12:42 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியை சேர்ந்த என்ஜினீயருக்கும், ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த பெண்ணுக்கும் தமிழ் கலாசாரப்படி திருமணம் நடந்தது.

கோவில்பட்டி,

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் சைக்கிள் கடை நடத்தி வருபவர் சங்கர நாராயணன். இவருடைய மனைவி கோமதி. இவர்களுடைய மகன் வைரமயில் (வயது 30). ஜெர்மனி நாட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை செய்து வருகிறார்.

இவருக்கும், ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த வக்கீலான டீட்டர் கச்கே மகள் பீட்ரிச் என்ற பியாவுக்கும் (28) இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மலர்ந்தது. இருவரும் தீவிரமாக காதலித்து வந்தனர். கடல் கடந்த இந்த காதல் இருவரின் பெற்றோருக்கும் தெரியவந்ததால் இவர்களுக்கு மணம் முடிக்க இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர்.

இவர்களது திருமணம் நேற்று காலையில் கோவில்பட்டியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தமிழ் கலாசார முறைப்படி நடந்தது. திருமண விழாவுக்காக ஜெர்மனி நாட்டில் இருந்து வந்த பீட்ரிச்சின் குடும்பத்தினர் அனைவரும் பட்டு வேட்டி, சட்டை, பட்டுச்சேலை அணிந்து இருந்தனர். மணமேடையில் திருவள்ளுவர் படம் வைக்கப்பட்டு இருந்தது.

அந்த படத்தின் முன்பாக மணமக்கள் ஒருவருக்கு ஒருவர் மாலைகளை மாற்றி கொண்டனர். பின்னர் மணமகள் பீட்ரிச்சின் கழுத்தில் மணமகன் வைரமயில் தாலி கட்டினார். தொடர்ந்து அவர்கள் மோதிரங்களை மாற்றி கொண்டனர். திரைப்பட இயக்குனர் களஞ்சியம் உள்பட திரளானவர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இந்த காதல் மலர்ந்தது எப்படி என்பது பற்றி வைரமயில் கூறுகையில், ‘என்ஜினீயரிங் படித்து விட்டு ஜெர்மனி நாட்டில் எம்.எஸ். படிக்க சென்றேன். அங்கு உள்ள சால்சா நடன பயிற்சி மையத்துக்கு சென்று நடனம் கற்றேன். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி கொண்டே வக்கீலுக்கு படித்து வந்த பியாவும் அங்கு நடன பயிற்சிக்கு வந்தார்.

அப்போது எங்களுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மலர்ந்தது. கடந்த ஆகஸ்டு மாதம் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் எனக்கு வேலை கிடைத்தது. அதனை தொடர்ந்து திட்டமிட்டபடி தமிழ் மண்ணில் எங்களது திருமணம் நடந்து முடிந்துள்ளது” என்றார்.

Next Story