திராவிட கட்சிகளின் ஆட்சியில் ஊழல் மூலம் சுரண்டப்பட்ட பணம் மீண்டும் மக்களுக்கே சென்று சேர வேண்டும் டாக்டர் ராமதாஸ்


திராவிட கட்சிகளின் ஆட்சியில் ஊழல் மூலம் சுரண்டப்பட்ட பணம் மீண்டும் மக்களுக்கே சென்று சேர வேண்டும் டாக்டர் ராமதாஸ்
x
தினத்தந்தி 13 Nov 2017 12:15 AM IST (Updated: 12 Nov 2017 10:51 PM IST)
t-max-icont-min-icon

திராவிட கட்சிகளின் ஆட்சியில் ஊழல் மூலம் சுரண்டப்பட்ட பணம் மீண்டும் மக்களுக்கே சென்று சேர வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை, 

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

சசிகலா, அவரது உறவினர்கள் மற்றும் பினாமிகளின் வீடுகள், அலுவலகங்கள் என நாடு முழுவதும் 187 இடங்களில் கடந்த 4 நாட்களாக வருமான வரி சோதனைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. 1800–க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பங்கேற்றுள்ள இந்த சோதனையில் கோடிக்கணக்கில் பணம், நகை, வைரம், சொத்துப் பத்திரங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படும் போதிலும், அது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதையும் வருமான வரித்துறை இப்போது வரை வெளியிடப்படவில்லை.

சசிகலா இன்று வேண்டுமானால் சிறையில் இருக்கலாம். அவரது குடும்பம் இப்போது வேண்டுமானால் அதிகாரத்தில் இருந்து தொலைவில் இருக்கலாம். ஆனால், வாய்ப்புக் கிடைத்தால் ஊழலால் அரிக்கப்பட்டது போக மீதமுள்ள தமிழகத்தை ஒரே நாளில் கபளீகரம் செய்யும் திறன் அக்குடும்பத்திற்கு உண்டு.

தமிழகத்தை இப்போது ஆட்சி செய்யும் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும், நாளை உலகம் அழியும் முன் இன்றே ஊரைச் சுருட்ட வேண்டும் என்ற வேகத்தில் ஊழல் செய்து கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கு எல்லாம் வழிகாட்டியான தி.மு.க.வை பற்றிக் கூற வேண்டியதில்லை.

வருமான வரி சோதனை நடத்தி, அதில் கண்டுபிடிக்கப்படும் கணக்கில் காட்டப்படாத சொத்துகளுக்கு தண்டம் விதித்து அவற்றை சட்டப்பூர்வ சொத்துகளாக மாற்ற அனுமதிக்கக்கூடாது. ஊழல் மூலம் குவித்த சொத்துகள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவற்றை மீட்டுவர வேண்டும்.

ஏனெனில், தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்து வரும் திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் ஊழல் மூலம் சுரண்டப்பட்டது முழுவதும் மக்களின் வரிப்பணம் தான். அந்த பணம் மீண்டும் அவர்களுக்கே சென்று சேர வேண்டும். அதற்காக, தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் ஊழல் அரசை உடனடியாக அகற்ற வேண்டும். கடந்த காலங்களில் நடந்த ஊழல்கள் குறித்து விசாரணை நடத்தி, கொள்ளையடிக்கப்பட்ட மக்களின் வரிப் பணத்தை மீட்டெடுக்கத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story