‘தி.மு.க.–காங்கிரஸ் கூட்டணி உறுதியாக இருக்கிறது’ திருநாவுக்கரசர்


‘தி.மு.க.–காங்கிரஸ் கூட்டணி உறுதியாக இருக்கிறது’ திருநாவுக்கரசர்
x
தினத்தந்தி 13 Nov 2017 1:00 AM IST (Updated: 13 Nov 2017 12:22 AM IST)
t-max-icont-min-icon

தி.மு.க.–காங்கிரஸ் கூட்டணி உறுதியாக இருக்கிறது என திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

சென்னை

தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர், சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:–

தி.மு.க. தலைவர் கருணாநிதி, இந்தியாவின் மூத்த தலைவர். அவரை பிரதமர் சென்று பார்த்தது மரியாதை நிமித்தமான சந்திப்பு. இதில் எந்தவிதமான அரசியலும் இல்லை என தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினும், நானும் விளக்கி சொல்லிவிட்டோம்.

தி.மு.க.–காங்கிரஸ் கூட்டணி பலமாக, உறுதியாக இருக்கிறது. மோடி சந்தித்ததால் தமிழகத்தில் அரசியல் தாக்கமோ, பாதிப்போ ஏற்படுத்தாது. தி.மு.க.–காங்கிரஸ் கட்சி இடையே எந்த பிரச்சினையும் இல்லை.

இந்திரா காந்தி நூற்றாண்டு விழா நிறைவு பொதுக்கூட்டம் கோவையில் 18–ந்தேதி நடக்கிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்க தி.மு.க. உள்பட அனைத்து கட்சி தலைவர்களையும் அழைத்து உள்ளோம். இதில் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.

அமைச்சர்கள், தலைமை செயலாளர், சேகர் ரெட்டி, அன்புநாதன் உள்பட பலர் வீட்டில் வருமான வரி சோதனை நடந்தது. அதன்பின்னர் யார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது?. ஜெயலலிதா மறைவுக்குப்பின் நடந்தவை, தற்போது நடக்கும் வருமான வரி சோதனைகள் குறித்து தெளிவுபடுத்த வேண்டும்.

அ.தி.மு.க. உடைவதற்கு முன் இதை செய்திருக்க வேண்டியது தானே. ஒரு தரப்பினரை மட்டும் துரத்தி, துரத்தி சோதனை செய்வது ஏன்?. இரட்டை இலை சின்னம் ஒரு அணிக்கு தர முடிவு செய்துவிட்டார்கள். மற்றொரு தரப்பை பலவீனப்படுத்த வேண்டும்.

இரட்டை இலை சின்னம் பெறும் அணியுடன் வருங்காலத்தில் கூட்டணி அமைத்து பாராளுமன்ற தேர்தலை சந்திக்க வேண்டும். இதற்காக ஒரு தரப்பை மிரட்டி பலவீனப்படுத்துவதும், மற்றொரு தரப்பை பலப்படுத்துவமான பணியை மத்திய பாரதீய ஜனதா அரசு செய்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story