அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சமாதிகளை இடம் மாற்றக்கோரி வழக்கு; மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்


அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சமாதிகளை இடம் மாற்றக்கோரி வழக்கு; மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்
x
தினத்தந்தி 13 Nov 2017 7:47 PM IST (Updated: 13 Nov 2017 7:47 PM IST)
t-max-icont-min-icon

அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது சமாதிகளை இடம் மாற்றக்கோரிய வழக்கிற்கு பதிலளிக்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில், டிராபிக் ராமசாமி தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:–

தமிழக முதல்–அமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உயிரிழந்தார். அவரது உடல் மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அந்த இடங்களில் ஏற்கனவே மறைந்த முதல்–அமைச்சர்கள் அறிஞர் அண்ணா, எம்.ஜி.ராமச்சந்திரன் ஆகியோரது சமாதிகள் உள்ளன.

தற்போது ஜெயலலிதாவின் சமாதியுடன் சேர்த்து அங்கு 3 சமாதிகள் உள்ளன. ஜெயலலிதாவின் நினைவிடத்தை ரூ.15 கோடி செலவில் கட்டுவதற்கு தமிழக அமைச்சரவை முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே, கடலோர பகுதிகளை பாதுகாக்க மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடலோர பகுதிகளில் கட்டிடம் கட்டுவதற்கு தடைவிதித்தும், அப்பகுதியை சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாமல் பாதுகாப்பது குறித்தும் கடந்த அக்டோபர் மாதம் 6–ந் தேதி மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஆனால், மெரினா கடற்கரையில் 3 பெரும் தலைவர்களின் சமாதிகள் உள்ளதால், அவர்களுக்கு அஞ்சலி செலுத்த ஏராளமான மக்கள் தினமும் வந்து செல்கின்றனர். இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும்.

மெரினா கடற்கரையில் போராட்டம் நடப்பதை தடுக்கும்விதமாக, அவ்வப்போது போலீசார் 144 தடை உத்தரவுகளை வேறு பிறப்பிக்கின்றனர். மேலும், எதிர்காலத்தில் வேறு சில அரசியல் தலைவர்களின் சமாதிகள் இங்கு அமைக்கப்படலாம்.

எனவே, மெரினா கடற்கரையில் இந்த 3 தலைவர்களின் சமாதிகள் இருப்பது சரியாக இருக்காது. அதனால், இந்த சமாதிகளை கிண்டியில் உள்ள காந்தி சமாதியில் உள்ள வளாகத்துக்கு மாற்ற உத்தரவிடவேண்டும். இதுகுறித்து நான் கொடுத்த கோரிக்கை மனுவை தமிழக தலைமை செயலாளர் உள்ளிட்டோர் பரிசீலிக்க உத்தரவிடவேண்டும்.  இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் விசாரித்தனர்.

அப்போது இந்த மனுவுக்கு 4 வாரத்துக்குள் பதில் மனு தாக்கல் செய்யும்படி தலைமை செயலாளர், கவர்னரின் செயலாளர், மத்திய சுற்றுச்சூழல் துறை செயலாளர், சென்னை மாநகராட்சி ஆணையர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.


Next Story