நிர்வாக சீரழிவுக்கு இதைவிட எடுத்துக்காட்டு இருக்க முடியாது வைகோ கண்டனம்


நிர்வாக சீரழிவுக்கு இதைவிட எடுத்துக்காட்டு இருக்க முடியாது வைகோ கண்டனம்
x
தினத்தந்தி 14 Nov 2017 4:15 AM IST (Updated: 14 Nov 2017 2:03 AM IST)
t-max-icont-min-icon

அரசு போக்குவரத்து கழக பணிமனைகள் அடமானம் வைக்கப்பட்டுள்ள நிலையில், நிர்வாக சீரழிவுக்கு இதைவிட எடுத்துக்காட்டு இருக்க முடியாது என்று வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் இயங்கி வரும் நிலைமை குறித்து வெளியாகி உள்ள தகவல்கள் பெரும் அதிர்ச்சியைத் தருகின்றன. தமிழகத்தில் 8 அரசுப் போக்குவரத்துக் கழகங்களில், சென்னை மாநகரம், மதுரை மற்றும் கோவை கோட்டங்கள் பணிமனைகள், நிலம், கட்டிடங்கள் போன்றவற்றை வங்கிகளில் அடமானம் வைத்து 2458.88 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ள தகவல் வெளியாகி உள்ளது. அரசு பஸ்களும் அடகு வைக்கப்பட்டு இருக்கின்றன.

இதில், கோவை கோட்டம் 1549.6 கோடி ரூபாய் கடனுக்காக அசையும் மற்றும் அசையாச் சொத்துகளை அடமானம் வைத்து முன்னிலையில் உள்ளது. சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் 580.63 கோடி ரூபாயும், மதுரை கோட்டம் 363.82 கோடி ரூபாய்க்கும் அடமானம் வைத்து கடன் பெற்றுள்ளன.

போக்குவரத்துத் துறையின் நிர்வாகச் சீரழிவுக்கு இதைவிட வேறு எடுத்துக்காட்டு இருக்க முடியாது. புதிய பஸ்கள் வாங்குவது, உதிரி பாகங்கள் வாங்குவது உள்ளிட்ட அனைத்திலும் நடைபெற்று வரும் ஊழல்களால் போக்குவரத்துக் கழக நிர்வாகம் புரையோடிப் போய் இருக்கிறது.

தமிழக அரசின் வருவாய் பற்றாக்குறை ரூ.15,850 கோடி என்றும், தென் மாநிலங்களிலேயே இது தான் அதிகம் என்றும் மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட மாநிலங்களின் நிதிநிலை அறிக்கையில் சுட்டிக்காட்டி இருக்கிறது.

நடப்பு நிதி ஆண்டில் தமிழகத்தின் நிதிப் பற்றாக்குறை ரூ.42 ஆயிரம் கோடி அளவுக்கு உயரும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் ஒட்டுமொத்தக் கடன் சுமை ரூ.5 லட்சத்து 75 ஆயிரம் கோடியைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அரசின் போக்குவரத்துத்துறை மட்டுமின்றி, மற்ற துறைகளையும் ஆய்வு செய்தால்தான் அ.தி.மு.க. அரசின் ஒட்டுமொத்த செயல்பாட்டின் லட்சணம் தெரிய வரும்.

எனவே, வேளாண் உற்பத்தி பாதிப்பு, தொழில்துறைகள் முடக்கம், வேலை வாய்ப்பின்மை போன்றவற்றில் அரசு தீவிர கவனம் செலுத்தி பொருளாதார நெருக்கடியில் இருந்து தமிழகத்தை மீட்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story