அடுத்த மாதம் 12–ந்தேதி ரஜினிகாந்த் அரசியல் முடிவை அறிவிப்பாரா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு


அடுத்த மாதம் 12–ந்தேதி ரஜினிகாந்த் அரசியல் முடிவை அறிவிப்பாரா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 14 Nov 2017 4:45 AM IST (Updated: 14 Nov 2017 2:17 AM IST)
t-max-icont-min-icon

ரஜினிகாந்த் அடுத்த மாதம் 12–ந்தேதி அரசியல் பிரவேசம் குறித்த முடிவை அறிவிப்பாரா? என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

சென்னை,

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என்பது குறித்து பரபரப்பான எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. கடந்த மே மாதம் சென்னையில் ரசிகர்களை அழைத்து, ‘‘நாட்டில் அமைப்பு கெட்டுக் கிடக்கிறது என்றும், போருக்கு தயாராக இருங்கள் என்றும் அழைப்பு விடுத்ததில் இருந்து அவரது அரசியல் வருகைபற்றிய விவாதங்கள் நடந்து வருகின்றன.

ரசிகர்களும் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள். அரசியலுக்கு வரமாட்டேன் என்று இதுவரை அவர் மறுக்கவில்லை.

அரசியல் கட்சி நடத்தும் மூத்த நடிகர்கள் பிற கட்சிகளில் இருக்கும் தனது நண்பர்கள், நடிகர், நடிகைகள் என்று பலரிடம் அரசியலுக்கு வருவது குறித்து அவர் கருத்து கேட்டு வந்தார். அனைவரும் அரசியலுக்கு வரும்படி ஆலோசனைகள் கூறியுள்ளனர். ஜெயலலிதா மறைவாலும் கருணாநிதியின் வயது மூப்பாலும் தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் ஏற்பட்டு உள்ளது என்றும் அதை உங்களால் நிச்சயம் நிரப்ப முடியும் என்றும் அவர்கள் நம்பிக்கை ஊட்டி இருக்கிறார்கள்.

இதனால் அரசியலில் ஈடுபடுவதற்கான ஆயத்தங்களில் ரஜினிகாந்த் ஈடுபட்டு வருவதாகவும் கட்சி பெயர், கொடி, சின்னங்களை உருவாக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டு இருப்பதாகவும் தகவல்கள் வந்தன. விரைவில் ரசிகர்களை கூட்டி அரசியல் பிரவேசத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்றும் பேச்சு அடிபட்டது.

ஆனால், கமல்ஹாசன் திடீரென்று அரசியலுக்கு வருவதாக அறிவித்து இருப்பது ரஜினிகாந்தை யோசிக்க வைத்து இருக்கிறது. அரசியலுக்கு வர அவர் தயங்குவதாகவும் கூறப்பட்டது.

ஆனால் ரசிகர்கள் தரப்பில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதி என்கிறார்கள். ‘‘அரசியலில் ஈடுபடுவதற்கான அனைத்து வேலைகளையும் ரகசியமாக அவர் முடித்து விட்டார். கட்சி பெயரை அறிவிப்பது மட்டுமே பாக்கி’’ என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

ரஜினிகாந்த் நடித்து வந்த 2.0, காலா ஆகிய இரண்டு படப்பிடிப்புகளும் முடிந்து விட்டன. அடுத்து புதிய படத்தில் நடிக்க அவர் யாருக்கும் கால்ஷீட் கொடுக்கவில்லை. அரசியலுக்கு வருவதற்காகவே புதிய படங்களில் அவர் ஒப்பந்தமாகவில்லை என்றும் கூறுகிறார்கள். ரஜினிகாந்தின் பிறந்தநாள் அடுத்த மாதம் (டிசம்பர்) 12–ந்தேதி வருகிறது.

அப்போது சென்னையில் ரசிகர்கள் மாநாட்டை கூட்டி அரசியல் பிரவேசத்தை அறிவிப்பார் என்றும், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது. ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் அரசியலில் இணைந்து செயல்படலாம் என்ற கருத்தும் உள்ளது. இருவரும் ஒரே அரசியல் மேடையில் ஏறினால் தமிழகம் முழுவதும் பெரிய ஆதரவு கிடைக்கும் என்றும் அடுத்த தேர்தலில் அ.தி.மு.க, தி.மு.கவுக்கு எதிராக வலுவான சக்திகளாக திகழ முடியும் என்றும் சிலர் ஆலோசனை வழங்கி உள்ளனர்.


Next Story