ஜெயலலிதா உடல் நலம் குறித்து பொய்யான தகவல்: அமைச்சர்களுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி ஐகோர்ட்டு உத்தரவு


ஜெயலலிதா உடல் நலம் குறித்து பொய்யான தகவல்: அமைச்சர்களுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 14 Nov 2017 3:30 AM IST (Updated: 14 Nov 2017 2:57 AM IST)
t-max-icont-min-icon

ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து பொய்யான தகவலை வெளியிட்ட அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யக்கோரிய வழக்கை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

சென்னை,

சென்னை பெசன்ட் நகரை சேர்ந்தவர் மனோகரன். இவர், ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:–

தமிழக முதல்–அமைச்சராக இருந்த ஜெயலலிதா, உடல் நலம் பாதிக்கப்பட்டு கடந்த ஆண்டு செப்டம்பர் 22–ந் தேதி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவர் சிகிச்சை பலனின்றி கடந்த ஆண்டு டிசம்பர் 5–ந் தேதி மரணமடைந்தார். இவர், ஆஸ்பத்திரியில் சிகிச்சைப் பெற்றுக்கொண்டிருந்தபோது, இவரது உடல் நலம் குறித்து பல்வேறு தகவல்கள் பரப்பப்பட்டன.

இதில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், வணிக வரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி ஆகியோர் உண்மைக்கு புறம்பான தகவலை மக்கள் மத்தியில் பரப்பியுள்ளனர்.

இதில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ‘ஜெயலலிதா நல்ல உடல் நலத்துடன் உள்ளார். அவர் இட்லி சாப்பிட்டார். டீ குடித்தார். சிகிச்சை அளித்த டாக்டர்களை பார்த்து சிரித்தார். என்னோடு அரசியல் விவகாரம் குறித்து விவாதித்தார்’ என்று பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்தார்.

இவரது வார்த்தையை நம்பி, ஜெயலலிதா விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என்று பொதுமக்கள் பலர் நினைத்தனர். ஆனால், கடந்த செப்டம்பர் 24–ந் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில், பேசிய திண்டுக்கல் சீனிவாசன், ‘ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார், டீ குடித்தார் என்று சொன்னது எல்லாம் பொய். ஜெயலலிதாவை யாரும் பார்க்கவே இல்லை. மத்திய மந்திரிகள், தி.மு.க. தலைவர்கள் உள்ளிட்டோர், ஆஸ்பத்திரி உரிமையாளர் பிரதாப் ரெட்டியையும், சசிகலாவையும் மட்டுமே சந்தித்து சென்றனர். சசிகலா, அவரது குடும்பத்தினரால் தொந்தரவு வரும் என்பதற்காக இப்படி பேசினேன்’ என்று கூறியுள்ளார்.

அதேபோல, அமைச்சர் கே.சி.வீரமணியும், சசிகலாவின் மிரட்டலுக்கு பயந்து, ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து தவறான தகவல் தெரிவித்ததாக கூறியுள்ளார். எனவே, அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் அமைச்சர்களாக பதவி ஏற்ற இவர்கள் இருவரும், பதவி பிரமாணத்துக்கு எதிராக செயல்பட்டுள்ளனர். மேலும், ஆஸ்பத்திரியில் ஜெயலலிதா இருந்தபோது, காவிரி விவகாரம் உள்ளிட்ட பல பிரச்சினை குறித்து ஆலோசனைக் கூட்டம் நடந்ததாக கூறப்பட்டது. தற்போது இதுகூட நம்பும்படியாக இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பொய்யான தகவல் பொதுமக்களுக்கு தெரிவித்த இந்த இரு அமைச்சர்களையும் பதவி நீக்கம் தமிழக கவர்னருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு, ‘ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமி‌ஷன் அமைக்கப்பட்டுள்ளது. மனுதாரர் அந்த கமி‌ஷனிடம் முறையிடலாம்’ என்று கருத்து கூறினார். பின்னர், இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


Next Story