அனைத்து பக்தர்களும் தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் அறநிலையத்துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவு
பணம் கொடுத்தாலும் சரி, கொடுக்காவிட்டாலும் சரி அனைத்து பக்தர்களையும் ஒரே இடத்தில் இருந்து சாமி தரிசனம் செய்யும் விதமாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.
சென்னை,
சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்தவர் அரவிந்தலோசனன். இவர், ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:–
கோவில்களில், பணம் செலுத்தி சிறப்பு தரிசனத்துக்கு செல்பவர்கள் மூலஸ்தானத்துக்கு குறுக்கு வழியில் விரைவாக செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால், பணம் செலுத்தாமல், செல்லும் பக்தர்கள் கோவிலை சுற்றி மூலஸ்தானத்துக்கு வரவேண்டியது உள்ளது.
வழிபாட்டு தலங்கள், இதுபோல லாப நோக்கத்துடன், பக்தர்களிடையே பாகுபாட்டை ஏற்படுத்தும் விதமாக செயல்படக்கூடாது. எனவே, பணம் பெற்றுக்கொண்டு சிறப்பு தரிசனத்துக்கு அனுமதிக்கும் முறையை ரத்து செய்யவேண்டும் என்றும் பக்தர்கள் அனைவரையும் சமமாக நடத்தும்படி இந்து சமய அறநிலையத்துறை செயலாளர், ஆணையர் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் விசாரித்தனர். பின்னர், ‘பணம் கொடுத்தாலும் சரி, பணத்தை கொடுக்காவிட்டாலும் சரி அனைத்து பக்தர்களும், மூலஸ்தானதுக்கு குறிப்பிட்ட தூரத்தில் இருந்து, அதாவது அனைவரும் ஒரே இடத்தில் இருந்து சாமி தரிசனம் செய்யும் விதமான நடவடிக்கையை இந்து சமய அறநிலையத்துறை எடுக்க வேண்டும். பணத்தை கொடுப்பவர்களை மூலஸ்தானத்துக்கு மிக அருகில் அனுமதிப்பது, பணம் கொடுக்காதவர்களை தூரத்தில் நிற்க வைப்பதை ஏற்க முடியாது. அனைவரும் ஒரே தூரத்தில் நின்று சாமி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.