தமிழகத்தில் ரேஷனில் உளுந்தம் பருப்பு வழங்குவது நிறுத்தம்


தமிழகத்தில் ரேஷனில் உளுந்தம் பருப்பு வழங்குவது நிறுத்தம்
x
தினத்தந்தி 15 Nov 2017 4:45 AM IST (Updated: 15 Nov 2017 12:41 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு உளுந்தம் பருப்பு வழங்குவது நிறுத்தப்பட்டுவிட்டது என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறினார்.

சென்னை,

தமிழகத்தில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு உளுந்தம் பருப்பு வழங்குவது நிறுத்தப்பட்டுவிட்டது என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறினார்.

இதுகுறித்து தலைமைச் செயலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு, அமைச்சர் காமராஜ் அளித்த பேட்டி வருமாறு:-

ஸ்மார்ட் கார்டு திட்டம், தமிழகத்தில் துணிச்சலோடு கொண்டுவரப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் இதுபோன்ற திட்டம் இல்லை. திருமணத்துக்குப்பின் புதிய குடும்பங்கள் உருவாகும்போது, அவர்களுக்கும் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்படும். இது தொடர்ச்சியாக நடக்கும் திட்டம். இதற்கு காலக்கெடு இல்லை.

ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்காவிட்டாலும், அதை வாங்கிவிட்டதாக செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். வருவதாக கூறுவது தவறு. பொருள் வாங்கியதும் விரல் ரேகையை ரேஷன் அட்டைதாரர் வைக்கும் வசதி தற்போது ஏற்படுத்தப்படவில்லை. தற்போது வளர்ந்து வரும் திட்டம். எனவே சிறிய சிறிய பிரச்சினைகள் வருகின்றன. அவை சரிசெய்யப்படும்.

ரேஷன் அட்டை பற்றி புகார் தெரிவிப்பதற்காக டி.என்.பி.டி.எஸ். என்ற வெளிப்படைத்தன்மை கொண்ட செயலி(ஆப்) தரப்பட்டுள்ளது. அதன் மூலம் பதில் அளிக்கப்படுகிறது. அப்படி வராதபட்சத்தில் அதை அரசின் கவனத்துக்கு கொண்டுவந்தால் சரிசெய்யப்படும். பொதுவாக, புகார் பெறப்பட்ட உடனேயும், அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட உடனேயும் எஸ்.எம்.எஸ். வந்துவிடும்.

மசூர் பருப்பு அளவுக்கு அதிகமாக கொள்முதல் செய்யப்படவில்லை. மசூர் பருப்பு, துவரம் பருப்பு, கனடியன் லெண்டில் ஆகிய 3 பருப்புகளையும் கொள்முதல் செய்ய மாதந்தோறும் தேவை, இருப்பை பொறுத்து டெண்டர் விடப்படுகிறது. இந்த 3 பருப்புகளும் முந்தைய காலத்தில் இருந்தே பயன்பாட்டில் உள்ளன. இவற்றில் அதிக விளைச்சல் மற்றும் உடனடியாக கிடைக்கும் பருப்பை கொள்முதல் செய்கிறோம். மசூர் பருப்பு உடலுக்கு கேடு விளைவிக்காது என்பதை விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

ரேஷன் கடைகளில் உளுந்தம்பருப்பு கிடைக்கவில்லை என்று கூறுகிறீர்கள். ரேஷன் பொருட்களை குறைந்த அளவில் கொடுப்பதால்தான் மக்களுக்கு குறைவான அளவில் ரேஷன் பொருட்களை தருவதாக கடை ஊழியர்கள் கூறுவதாக சொல்கிறீர்கள். 2008-ம் ஆண்டில் இருந்து துவரம்பருப்பு அல்லது கனடியன் லெண்டில் பருப்பை 13 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்துகொண்டிருந்தோம்.

அதே நேரத்தில் 7 மெட்ரிக் டன் உளுந்தம் பருப்பையும் வாங்கிக் கொண்டிருந்தோம். இதில் துவரம் பருப்பு பலருக்கும், உளுந்தம் பருப்பு சிலருக்கும் கிடைத்தது. ஆனால் ஒவ்வொரு அட்டைக்கும் ஒரு கிலோ பருப்பு கிடைக்கவேண்டும் என்பதை உறுதி செய்வதற்காக 21 ஆயிரம் மெட்ரிக் டன் மசூர் பருப்பு அல்லது துவரம் பருப்பு அல்லது கனடியன் லெண்டில் பருப்பை கொள்முதல் செய்கிறோம்.

அந்த வகையில் இந்த 3-ல் ஒரு பருப்பு ஒரு ரேஷன் அட்டைக்கு ஒரு கிலோ வழங்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது உளுந்தம் பருப்பை கொடுப்பதாக அரசு சொல்லவில்லை. அதற்கு பதிலாக, ஏதோ ஒரு பருப்பை மக்களுக்கு ஒரு கிலோ கொடுப்பதை உறுதி செய்வதற்காக, மசூர் பருப்பு அல்லது துவரம் பருப்பு அல்லது கனடியன் லெண்டில் பருப்பை ஒரு மாதத்துக்கு 21 மெட்ரிக் டன் கொள்முதல் செய்கிறோம்.

சர்க்கரை விலை ஏற்றத்தால் அதை வாங்குகிறவர்களின் எண்ணிக்கை குறையவில்லை. ஏழைகளுக்கான 19 லட்சம் அட்டைகளுக்கு (அந்தியோதயா அன்னயோஜனா அட்டைகள்) ஒரு கிலோ சர்க்கரை ரூ.13.50 பைசாவுக்கு வழங்குகிறோம். இந்த அட்டைகள் தவிர வேறு அட்டைகளுக்கு மற்ற மாநிலங்களில் சர்க்கரை வழங்கப்படவில்லை.

தமிழகத்தில் மட்டும்தான் மற்ற அட்டைகளுக்கும் சர்க்கரை வழங்கப்படுகிறது. மத்திய உணவு பாதுகாப்பு சட்டம் வந்த பிறகும் தமிழகத்தில் மட்டும்தான் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.

வெளிச்சந்தையில் ரூ.45-க்கு சர்க்கரையை கொள்முதல் செய்து அதை மக்களுக்கு ரூ.25-க்கு தமிழக அரசு வழங்குகிறது. அதன்படி கிலோ ஒன்றுக்கு ரூ.20-ஐ மானியமாக அரசு அளிக்கிறது. இதற்காக ரூ.836 கோடியை உணவு மானியத்துக்கு அரசு ஒதுக்குகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story