மதுக்கடைகளை அதிகரிக்கும் அ.தி.மு.க. அரசின் நடவடிக்கை கவலை அளிக்கிறது மு.க.ஸ்டாலின்


மதுக்கடைகளை அதிகரிக்கும் அ.தி.மு.க. அரசின் நடவடிக்கை கவலை அளிக்கிறது மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 15 Nov 2017 4:30 AM IST (Updated: 15 Nov 2017 12:43 AM IST)
t-max-icont-min-icon

மதுக்கடைகளை அதிகரிக்கும் அ.தி.மு.க. அரசின் குரோத நடவடிக்கை கவலை அளிக்கிறது என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை,

தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்பட்டு பூரண மதுவிலக்கு என்ற நிலை எய்தப்படும்” என 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வாக்குறுதி அளித்துவிட்டு, பல வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டதைப் போல, இன்று புதிதாக மதுக்கடைகளைத் திறப்பதற்காக, சுப்ரீம் கோர்ட்டு வரை அ.தி.மு.க. அரசே ஓடோடிச் சென்று வாதிட்டுக் கொண்டிருப்பது வேதனை அளிப்பதாக உள்ளது.

“பூரண மதுவிலக்கு” என்று தம்பட்டம் அடித்து, குதித்துக் கொண்டிருந்த அ.தி.மு.க. அரசு தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் தூரத்திற்குள் வைக்கப்பட்டுள்ள மதுக்கடைகளுக்கு எதிராக அளித்த தீர்ப்பை முழுமனதுடன் ஏற்று, தமிழக பெண்களின் எதிர்பார்ப்பையும் நிம்மதியையும் கருதி, அனைத்து பகுதிகளிலுமே டாஸ்மாக் கடைகளை மூட முன்வந்திருக்க வேண்டும். இதனை நான் அப்போதே அறிக்கை மூலம் வலியுறுத்தினேன்.

ஆனால், அதற்கு பதிலாக சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை வலுவிழக்க வைக்கும் விதத்தில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளின் வழியாக செல்லும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை உள்ளாட்சிகளின் சாலைகளாக வகைமாற்றம் செய்து, மீண்டும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் டாஸ் மாக் கடைகளைத் திறக்க முயற்சிப்பது, சமூக தீமைக்கும் பெண்குலத்தின் போராட்டத்திற்கும் சிவப்புக் கம்பளம் விரிக்கும் இந்த அரசின் விபரீத மனநிலையைப் பிரதிபலிக்கிறது. பூரண மதுவிலக்கு என்று அளித்த தேர்தல் வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டு, கடைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் குரோத நடவடிக்கையில் அ.தி.மு.க. அரசு ஈடுபட்டிருப்பது கவலையளிக்கிறது.

சட்டம் ஒழுங்கு, பொது அமைதி, பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் என எதுபற்றியும் துளியும் கவலைப்படாமல், டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை எப்படியும் உயர்த்திவிடுவது குறுகிய மனப்பான்மையில், வருமானம் ஒன்றையே கவனத்தில் வைத்து இந்த அரசு செயல்படுவது கண்டிக்கத்தக்கது.

குடிமக்களின் துயரத்தையும், அவர்களின் உடல்நலத்திற்கு விளைவிக்கும் கேடுகளையும் புரிந்துகொள்ள மறுத்து இந்த அ.தி.மு.க. அரசு தள்ளாடிக் கொண்டிருக்கிறது. “குடிப்பழக்கத்திற்கு உள்ளாகி இருப்போரை மீட்போம்” என்று வாக்குறுதி அளித்து, வஞ்சித்து வாக்குகளைப் பெற்றுவிட்டு, இன்றைக்கு குடிப்பழக்கத்தை ஊக்குவித்து அதிகரித்திடும் அபாயப் பாதையில் ஆர்வத்துடன் பயணிக்கும் இந்த அ.தி.மு.க. அரசை மக்கள் என்றைக்கும் மன்னிக்க மாட்டார்கள்.

எண்ணற்ற குடும்பங்களை இன்னல் சுழலில் தள்ளிவிடுவதற்காக, ‘எங்கு காணினும் டாஸ்மாக் கடைகள்’ என்ற மதிமயக்க நிலையை ஏற்படுத்தப் போராடிக் கொண்டிருக்கும் இந்த மக்கள் விரோத அரசுக்கு கடும் கண்டனத்தை மீண்டும் தெரிவித்து, தான் அடித்த மூப்பில் டாஸ்மாக் கடைகளைத் திறக்கும் முடிவை அ.தி.மு.க. அரசு உடனடியாகக் கைவிட்டு, ஏழை-எளிய நடுத்தர குடும்பங்களை காப்பாற்ற வேண்டும் என்று பெரிதும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story