சவுமியமூர்த்தி தொண்டமான் பெயர் உடனடியாக இடம்பெற நடவடிக்கை சுஷ்மா சுவராஜூக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்


சவுமியமூர்த்தி தொண்டமான் பெயர் உடனடியாக இடம்பெற நடவடிக்கை சுஷ்மா சுவராஜூக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
x
தினத்தந்தி 15 Nov 2017 3:30 AM IST (Updated: 15 Nov 2017 12:46 AM IST)
t-max-icont-min-icon

இலங்கை அரசு நிறுவனங்களில் சவுமியமூர்த்தி தொண்டமான் பெயர் உடனடியாக இடம்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜூக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை,

இலங்கை அரசு நிறுவனங்களில் சவுமியமூர்த்தி தொண்டமான் பெயர் உடனடியாக இடம்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜூக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜூக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். இந்த கடிதத்தை நேற்று டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி., சுஷ்மா சுவராஜை நேரில் சந்தித்து வழங்கினார். அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

இலங்கையில் வாழும் இந்திய தமிழர்களின் முன்னேற்றத்துக்கு பங்காற்றிய, சவுமியமூர்த்தி தொண்டமானுடைய பெயரை, அரசு நிறுவனங்களின் பெயர் பலகைகளில் இருந்து நீக்கி வரும் இலங்கை அரசின் சமீபத்திய நடவடிக்கைகளை தங்களின் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன்.

பல ஆண்டுகளாக இந்தியத் தமிழர்கள், இலங்கையின் முன்னேற்றத்துக்காக பாடுபட்டு வருகிறார்கள் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஆனால், அவர்களுடைய பங்களிப்பை எல்லாம் உதாசீனப்படுத்திவிட்டு, சவுமியமூர்த்தி தொண்டமானின் பெயரை அரசு நிறுவனங்களில் இருந்து நீக்கியிருக்கிறது. மலையகத்தில் பணிபுரியும் தமிழர்களின் உரிமைகளுக்காகவும், கண்ணியத்துக்காகவும் சவுமியமூர்த்தி தொண்டமான்பாடுபட்டார் என்ற உண்மையை உணர்ந்திருப்பீர்கள்.

என்னதான் இலங்கையை, இந்தியா நட்பு நாடாக கருதினாலும், அதனுடைய வளர்ச்சிக்கு பொருளாதார உதவிகளை செய்தாலும், இந்தியாவின் நல்லெண்ணத்துக்கு மாறாகவே இலங்கை செயல்பட்டு வருகிறது என்பதை ஏமாற்றத்துடன் நினைவுபடுத்த விரும்புகிறேன். இலங்கை அரசு ஒருபுறம் ஈழத் தமிழர்களுக்கு உரிய, அவர் ஏற்றுக் கொள்ளும்படியான அதிகாரங்களை பகிர்ந்தளிக்காமலும், மறுபுறம் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட குற்றங்களை விசாரித்து தண்டிக்க நம்பகத்தன்மை வாய்ந்த மற்றும் சுதந்திரமான விசாரணையை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சில் மேற்கொள்ளுவதற்கு ஒத்துழைக்க மறுத்துவருகிறது.

தற்போது, மலையகத் தமிழர்களின் அன்புக்குரியத் தலைவர் சவுமியமூர்த்தி தொண்டமானின் பெயரை அகற்றி, அவர்களையும் அச்சுறுத்தி வருகிறது. தமிழர்களுக்கு எதிரான இலங்கை அரசின் இந்த தொடர் நடவடிக்கைகள், ஒரு நட்பு நாட்டின் சமரசமிக்க, பொறுப்புமிக்க எண்ணத்தை பிரதிபலிக்கவில்லை.

எனவே, சவுமியமூர்த்தி தொண்டமானின் பெயரை நீக்கும் உணர்வுப்பூர்வமான நடவடிக்கையை இலங்கை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதோடு, அந்த பெருமைமிக்கத் தலைவரின் பெயருக்கும், புகழுக்கும் எந்த வகையிலும் களங்கம் ஏற்படாமலும், இலங்கை வாழ் இந்தியத் தமிழர்களின் உணர்வுகள் பாதிக்கப்படாத வகையில் அவருடைய பெயரை அரசு நிறுவனங்களில் உடனடியாக இடம்பெறச் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தங்களை கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.


Next Story