ஆளுநர் ஆய்வு நடத்துவது மாநில அரசின் அதிகாரத்தில் தலையிடுவதாக உள்ளது டிடிவி தினகரன் குற்றச்சாட்டு


ஆளுநர் ஆய்வு நடத்துவது மாநில அரசின் அதிகாரத்தில் தலையிடுவதாக உள்ளது டிடிவி தினகரன் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 15 Nov 2017 11:45 AM IST (Updated: 15 Nov 2017 11:45 AM IST)
t-max-icont-min-icon

ஆளுநர் ஆய்வு நடத்துவது மாநில அரசின் அதிகாரத்தில் தலையிடுவதாக உள்ளது என்று டி.டி.வி. தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை

கோவை பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள நேற்று தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கோவை சென்றார். பல்கலைக்கழக நிகழ்ச்சிக்கு பிறகு  கோவை மாவட்ட கலெக்டர், மாநகராட்சி தனி அதிகாரி, மாநகர போலீஸ் கமிஷனர் உள்பட முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.   3 மணி நேரம் நடந்த இந்த ஆலோசனையில் கோவை மாவட்டத்தில் செய்துள்ள வளர்ச்சி பணிகள் தற்போது செய்து வரும் பணிகள், இனிமேல் செய்ய உள்ள பணிகள் குறித்து அதிகாரிகளிடம் தனித்தனியாக கேட்டறிந்தார். 

இந்த நிகழ்வு தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சிகள், ஆளுநர் ஆய்வு நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. இந்த நிலையில் இன்று காலை கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் சென்ற ஆளுநர், அங்கு தூய்மை இந்தியா திட்ட பணிகளை ஆய்வு செய்தார். மேலும், துடைப்பம் மூலம் குப்பைகளை அள்ளி தூய்மை பணியிலும் ஈடுபட்டார். இந்த நிகழ்ச்சியின் போது உள்ளாட்சிதுறை அமைச்சர் எஸ்.பி வேலுமணியும் உடன் கலந்து கொண்டார்.

பின்னர், காந்திபுரத்தில் நடந்த தூய்மை இந்தியா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ஆளுநர் களத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினால்தானே அரசை பாராட்ட முடியும்” என்றார்.

இது குறித்து உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், கோவையில் அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தியது கோவை மாவட்டத்துக்குப் பெருமை சேர்க்கக்கூடிய விஷயம்தான். இதில் எந்த தவறு இல்லை. என கூறினார்

ஆனால் கவர்னரின் இந்த நடவடிக்கைக்கு அ.தி.மு.,க. எம்பி. அன்வர்ராஜா  கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

ஆளுநரின் செயல்பாடு, மாநில சுயாட்சிக்கு எதிரானது. ஜெயலலிதா இருந்திருந்தால் இது போன்ற சம்பவங்கள் நடந்திருக்காது. ஆளுநர்களை வைத்து ஆட்சி செய்ய மத்திய அரசு முயற்சிக்கிறது என குற்றம் சாட்டினார்.  

ஆளுநர் ஆய்வு நடத்துவது மாநில அரசின் அதிகாரத்தில் தலையிடுவதாக உள்ளது என்று டி.டி.வி. தினகரன் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டரில் கூறி இருப்பதாவது:-

இது போன்ற ஆய்வுகள் வரவேற்கப்பட வேண்டியது என்று அமைச்சர்கள் சொல்வது வெட்கக்கேடானது. இதற்கெல்லாம் பதில் சொல்லவேண்டிய முதல்வர் பழனிச்சாமி தனது சுயநலத்தில் மட்டுமே கவனமாக இருக்கிறார்!

முதல்வர் பழனிச்சாமியின் அரசு, தங்களை காப்பாற்றிக் கொள்வதற்காக, மாநிலத்தின் நலன்களை அடகு வைக்க துளியும் தயங்காது என்பதையே ஆளுனரின் ஆய்வு உணர்த்துகிறது.  நீட் தேர்வு முதல், தொடர்ந்து தமிழகத்தின் நலன்கள் பறிபோய்க் கொண்டிருக்கின்றன.

தமிழகத்தில் இப்போது நடப்பது இதயதெய்வம் அம்மாவின் ஆட்சி அல்ல என்பதை இந்த ஆய்வு உறுதிப்படுத்துகிறது. அம்மா ஒருபோதும் இதுபோன்ற ஆய்வுகளை அனுமதிக்க மாட்டார். மாநில சுயாட்சியை எல்லா நிலைகளிலும் உறுதிப்படுத்துவதே அ.தி.மு.க.வின் கொள்கை.

புதுச்சேரி மற்றும் டெல்லியில் துணைநிலை ஆளுனர்களின் தலையீட்டால் எப்படி நிர்வாகம் ஸ்தம்பித்திருக்கிறதோ அதே நிலை தமிழகத்திற்கும் வரலாம். அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக அரசு அதிகாரத்தில் ஊடுறுவும்  பி.ஜே.பி.யின் பாணி இது போலும்!

தமிழக ஆளுனரின் ஆய்வு மாநில அரசின் அதிகாரத்தில் தலையிடுவதாக உள்ளது. மக்கள் விரோத பழனிச்சாமி அரசு வீட்டுக்குப் போக வேண்டும் என்பது தமிழக மக்களின் ஒட்டுமொத்த விருப்பம். அதற்கான முன்னோட்டமாகத்தான் இதைப் பார்க்க வேண்டி இருக்கிறது.


Next Story