யூ.பி.எஸ்.சி. தேர்வில் காப்பி அடித்த ஐ.பி.எஸ். அதிகாரி சபீர் கரீம் மீதான வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்


யூ.பி.எஸ்.சி. தேர்வில் காப்பி அடித்த ஐ.பி.எஸ். அதிகாரி சபீர் கரீம் மீதான வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்
x
தினத்தந்தி 15 Nov 2017 6:27 PM IST (Updated: 15 Nov 2017 6:27 PM IST)
t-max-icont-min-icon

யூ.பி.எஸ்.சி. தேர்வில் காப்பி அடித்த ஐ.பி.எஸ். அதிகாரி சபீர் கரீம் மீதான வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு உள்ளது.

சென்னை,

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யூ.பி.எஸ்.சி.) சார்பில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். உள்ளிட்ட 24 சிவில் சர்வீசஸ் பணிகளில் 985 பதவி இடங்களை நிரப்புவதற்கான முதன்மை தேர்வு கடந்த அக்டோபர் 28–ந்தேதி தொடங்கி நவம்பர் 5–ந்தேதி வரை நடந்தது. சென்னை உள்பட நாடு முழுவதும் 24 நகரங்களில் இந்த தேர்வு நடைபெற்றது.

ஐ.பி.எஸ். அதிகாரியான நாங்குநேரி உதவி போலீஸ் சூப்பிரண்டு சபீர் கரீமும் ஐ.ஏ.எஸ். ஆக வேண்டும் என்பதற்காக இந்த தேர்வை எழுதினார். எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் சபீர் கரீம் 28–ந்தேதி முதன்மை தேர்வை எழுதினார். தேர்வாளர்களை போலீசார் கடுமையாக சோதனை செய்தபின்னரே மையத்துக்குள் அனுமதிப்பார்கள். சபீர் கரீம் ஐ.பி.எஸ். அதிகாரி என்பதால் போலீசார் சோதனை செய்யாமல் மரியாதையுடன் அனுமதித்துள்ளனர்.

எனினும் அவரது செய்கைகள் அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து மத்திய உளவுப்பிரிவு அதிகாரிகள் சபீர் கரீமின் நடவடிக்கைகளை ரகசியமாக கண்காணித்தனர்.

சபீர் கரீம் தனது காதில் சிறிய அளவிலான ‘புளுடூத்’ கருவியை மறைத்து வைத்து, யாரிடமோ பேசுவதை கண்டுபிடித்தனர்.  தேர்வு மையத்தில் இருந்து கேள்விகளை அவரது மனைவியிடம் சொல்லி, அதற்கான விடைகளை கேட்டு எழுதியதை உளவுபிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

இதனையடுத்து நடந்த பொது அறிவு 2–ம் தாள் தேர்வையும் அதே பாணியில் எழுதியபோது அவர் பிடிபட்டார். உடனடியாக அவர் தேர்வு மையத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். அவர் எழுதிய விடைத்தாளும் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த சம்பவத்தில் சபீரை போலீசார் கைது செய்தனர்.  அவரது மனைவி ஜாய்ஸ் ஜோ ஐதராபாத்தில் பதுங்கி இருந்த நிலையில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய முகமது சபீது கான் என்பவர் கேரளாவில் கைது செய்யப்பட்டு உள்ளார்.  சபீர் கரீம் நடத்தும் அகாடமியின் ஊழியராக சபீது கான் இருந்துள்ளார்.  இந்த வழக்கில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில், ஐ.பி.எஸ். தேர்வில் காப்பி அடித்ததற்காக கைது செய்யப்பட்ட சபீர் கரீம் மீதான வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு உள்ளது.

Next Story