அரசு கிராம சுகாதார செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் சென்னையில் நடந்தது
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ். வளாகத்தில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு கிராம சுகாதார செவிலியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை,
மத்திய அரசு செவிலியர்களுக்கு இணையான படிகள் வழங்கவேண்டும், ஊதிய முரண்பாடுகளை களைந்திட வேண்டும் உள்ளிட்ட 28 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழகம் முழுவதிலும் இருந்து 500–க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கலந்துகொண்டு தமிழக அரசிற்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டம் குறித்து அரசு கிராம சுகாதார செவிலியர் சங்கத்தின் மாநில தலைவர் நிர்மலா கூறியதாவது:–
தமிழக அரசின் பொது சுகாதார துறையின் கீழ் இயங்கும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செவிலியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் அனைவருக்கும் மத்திய அரசு செவிலியர்களுக்கு இணையான படிகள் வழங்க வேண்டும், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டத்தை எளிமைப்படுத்த வேண்டும்.
குறிப்பாக அந்த நிதி உதவி திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நிதி வழங்குவதற்கு அவர்களை பற்றி 500–க்கும் மேற்பட்ட தகவல்களை பெற்று ‘பிக்மி’ என்ற சாப்ட்வேரில் பதிவிட வேண்டி உள்ளது. இதனால் செவிலியர்களின் தாய் சேய் நல பணி மிகவும் பாதிக்கப்படுகிறது. இதேபோல், தமிழக அரசு செவிலியர்களுக்கு உள்ள பல்வேறு பிரச்சினைகள் அனைத்தையும் களைய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக சுகாதார துறை இயக்குனரை சந்தித்து நாங்கள் முறையிட உள்ளோம். எங்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்றவில்லை என்றால் அடுத்தகட்ட போராட்டம் நடத்தப்படும்.
அதேபோல் டி.எம்.எஸ். வளாகத்தின் மற்றொரு பகுதியில் மருத்துவ பணியாளர்கள் தேர்வாணையத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழக அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த முறையில் பணியாற்றி வரும் செவிலியர்கள் பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
செவிலியர்களின் ஆர்ப்பாட்டத்திற்கு கைக்குழந்தையுடன் பங்கேற்க வந்த நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த மரிய சகாய சுசீலா என்ற செவிலியர் பேசும்போது, ‘கடந்த 2 வருடங்களுக்கு முன்பு நாங்கள் 11 ஆயிரம் பேர் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்த பட்டோம். ஆனால் இதுவரை எங்களை பணி நிரந்தரம் செய்யவில்லை. இதனால் அரசு கொடுக்கும் ஊதியத்தை வைத்து எங்களது குடும்பத்தை நடத்த மிகவும் கடினமாக உள்ளது. நாங்கள் 8 மணி நேரத்திற்கும் அதிகமாக பணியாற்றுவதால் எங்களது குழந்தைகளை கூட கவனித்துக்கொள்ள நேரமில்லாமல் மிகவும் கஷ்டப்படுகிறோம் என்றார்.