டி.டி.வி.தினகரனின் சகோதரி, மைத்துனருக்கு சிறை தண்டனை உறுதி – ஐகோர்ட்டு தீர்ப்பு
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பு: டி.டி.வி.தினகரனின் சகோதரி, மைத்துனருக்கு சிறை தண்டனை உறுதி ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
சென்னை,
சொத்துக்குவிப்பு வழக்கில் டி.டி.வி.தினகரனின் சகோதரி, மைத்துனருக்கு கீழ் கோர்ட்டு வழங்கிய சிறை தண்டனையை உறுதி செய்து சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது. தங்களிடம் உள்ள சொத்துக்கு வருமான வரி செலுத்தி உள்ளோம் என்று கூறி தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது என்று நீதிபதி தீர்ப்பில் கூறி உள்ளார்.
அ.தி.மு.க. அம்மா அணி பொதுச் செயலாளர் சசிகலாவின் அக்கா வனிதாமணியின் மகளும், அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனின் தங்கையுமான ஸ்ரீதளாதேவிக்கும், பாஸ்கரனுக்கும் 1990–ல் திருமணம் நடந்தது.
பாஸ்கரன், 1988–ம் ஆண்டு முதல் ரிசர்வ் வங்கியில் பணியாற்றி வந்தார். இவர்கள் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து இருப்பது தெரியவந்ததை தொடர்ந்து 1998–ம் ஆண்டு மார்ச் 18 மற்றும் 30–ந் தேதிகளில் இவர்களது வீடு, அலுவலகம், வங்கி லாக்கர் உள்பட பல்வேறு இடங்களில் சி.பி.ஐ. சோதனை நடத்தியது.
தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கியின் சாந்தோம் கிளையில் இருந்த இவர்களது லாக்கரை பரிசோதனை செய்தபோது ஏராளமான தங்கக் கட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டன. இதுபோல அசையும் மற்றும் அசையா சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
விசாரணைக்கு பின்பு இந்த வழக்கில் சி.பி.ஐ. தரப்பில் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில், 87 லட்சத்து 96 ஆயிரத்து 823 ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்துகளும், 2 கோடியே 28 லட்சத்து 91 ஆயிரத்து 994 ரூபாய் மதிப்புள்ள அசையும் சொத்துகளும், ஸ்ரீதளாதேவி பெயரில் 1 கோடியே 68 லட்சத்து 54 ஆயிரத்து 305 ரூபாய் மதிப்புள்ள சொத்துகளும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்பட்டிருந்தது.
மேலும், பாஸ்கரன் வேலையில் சேரும்போது ரூ.2 லட்சத்து 96 ஆயிரத்து 816 மதிப்புள்ள சொத்துகள் இருந்ததாக கணக்கு காட்டி உள்ளார். இதன்மூலம் அவர்கள் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்து உள்ளனர் என்றும் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கை சென்னையில் உள்ள சி.பி.ஐ. முதன்மை செசன்சு கோர்ட்டு விசாரித்து, பாஸ்கரனுக்கு 5 ஆண்டு சிறைதண்டனை, 20 லட்சம் ரூபாய் அபராதமும், ஸ்ரீதளாதேவிக்கு 3 ஆண்டு சிறைதண்டனை, ரூ.10 லட்சம் அபராதமும் விதித்து 2008–ம் ஆண்டு ஆகஸ்டு 26–ந் தேதி தீர்ப்பு கூறியது. இதை எதிர்த்து பாஸ்கரன், ஸ்ரீதளாதேவி ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.
இந்த மனு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறி இருப்பதாவது:–
மனுதாரர்கள் வீட்டில், ரொக்கப்பணம், தங்கம், வெள்ளிக் கட்டிகள் உள்ளிட்ட அசையும், அசையா சொத்துகள் ஏராளமாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவையெல்லாம் நேர்மையாக, சட்டரீதியாக சம்பாதித்த பணத்தில் வாங்க முடியுமா என்பதை கற்பனைகூட செய்து பார்க்க முடியவில்லை.
வருமானத்துக்குரிய வரியை செலுத்தி விட்டதாக மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வருவாய் ஆதாரங்களை தெரிவிக்காமல், வருமான வரியை மட்டும் செலுத்தி விட்டதாக கூறுவதால், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள இந்த சொத்துகள் எல்லாம் நேர்மையான வழியில் சம்பாதித்தவை என்று கூறி விட முடியாது. வரி செலுத்தும் கடமையை மனுதாரர்கள் நிறைவேற்றி உள்ளனர். அதற்காக, அவர்கள் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது. வருமானத்தின் ஆதாரம் என்பது அரசு ஊழியருக்கு நேர்மையான வழியில் வந்த வருவாயாக இருத்தல் அவசியம் ஆகும்.
சொத்துகள் சட்டப்படியான வருவாய் மூலம் பெறப்பட்டதாக இருக்க வேண்டும். மனுதாரர்கள் தங்களது சொத்துகள் எந்த வருவாய் மூலம் வாங்கப்பட்டன என்பதை தெரிவிக்காமல் வெறுமனே வரியை மட்டும் செலுத்திவிட்டு, அந்த சொத்துகள் எல்லாம் நியாயமான வழியில் சம்பாதித்தவை என்று கூறுவதை ஏற்க முடியாது.
சி.பி.ஐ. சோதனைக்கு பிறகுதான் மனுதாரர்கள் வருமான வரியையும் செலுத்தி உள்ளனர். மனுதாரர்கள் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, மனுதாரர்களுக்கு சி.பி.ஐ. முதன்மை செசன்சு கோர்ட்டு விதித்த சிறை தண்டனை உறுதி செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.