‘என் மீது வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார்’ அமைச்சர் தங்கமணிக்கு மு.க.ஸ்டாலின் சவால்
மின்சார மீட்டர் கொள்முதல் முறைகேடு புகார் விவகாரத்தில் என்மீது வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் என்று அமைச்சர் தங்கமணிக்கு மு.க.ஸ்டாலின் சவால் விடுத்து இருக்கிறார்.
சென்னை,
தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு மு.க.ஸ்டாலின் அளித்த பதில்களும் வருமாறு:–
கேள்வி:– மின் மீட்டர் கொள்முதல் டெண்டரில் முறைகேடு நடக்கவில்லை என மின்சாரத்துறையின் அமைச்சர் தெரிவித்து இருக்கிறாரே?.
பதில்:– டெண்டரில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றுதான் இந்த விவகாரம் நீதிமன்றத்துக்கு சென்றுள்ளது. நான் ஏதோ தவறான தகவலை சொல்வதாக அந்த துறையின் அமைச்சர் தங்கமணி கூறுவது வேடிக்கையானது. இந்த நேரத்தில், அவரிடம் நான் கேட்கும் ஒரே கேள்வி, மின்சார வாரியம் வழங்கி வரும் மின்சார மீட்டரின் விலை 454 ரூபாய். ஆனால், இப்போது டான்ஜெட்கோ 495 ரூபாய்க்கு மீட்டர் வாங்க வேண்டும் என்று டெண்டர் விட்டிருக்கிறார்கள். இது உண்மையா இல்லையா என்பதற்கு, நான் தவறான கருத்து சொல்வதாக கூறிவரும் மின்துறை அமைச்சர் தங்கமணி விளக்கம் சொல்ல வேண்டும்.
‘உதய்’ திட்டத்தை ரகசியமாக ஏற்றுக்கொண்டு, கையெழுத்திட்டு வந்தவர் அவர். இதிலும் ரகசியமாக கொள்ளையடிக்க முயற்சித்தார்கள். ஆனால், அது நீதிமன்றத்தின் மூலம் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறது. இதற்கான விளக்கத்தைதான் நான் கேட்டேன். இதை நான் மட்டும் சொல்லவில்லை, அனைத்து பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் செய்தியாக வந்துள்ளது.
ஒருவேளை நான் தவறான செய்தியை சொல்வதாக அவர் கருதினால், என்மீது வழக்குப் போடட்டும். அதை சந்திப்பதற்கு நான் தயாராக இருக்கிறேன்.
கேள்வி:– கவர்னர் அனைத்து மாவட்டங்களிலும் ஆய்வு செய்யலாம் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியிருக்கிறாரே?.
பதில்:– இப்போது நடைபெறும் அ.தி.மு.க. ஆட்சியில் இருக்கும் அமைச்சர்கள் என்ன பேசுகிறார்கள், எந்த அடிப்படையில் பேசுகிறார்கள், என்ன அர்த்தத்தோடு பேசுகிறார்கள், எந்த உணர்வோடு பேசுகிறார்கள் என்பதை புரிந்துகொள்ளவே முடியவில்லை. அதனால், அதற்கெல்லாம் பதில் கூற வேண்டிய அவசியமில்லை. ஆனால், கவர்னரை பொறுத்தவரையில் அவருடைய கடமை என்ன?. அவருடைய செயல்பாடுகள் எப்படியிருக்க வேண்டும்?. ஜனநாயக ரீதியில் அவரது நடவடிக்கைகள் எப்படியிருக்க வேண்டும் என்பதை பற்றி நான் ஏற்கனவே அறிக்கையில் வெளியிட்டிருக்கிறேன். அதைதான் நான் மீண்டும் நினைவுபடுத்த விரும்புகிறேன். இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.