வங்க கடலில் புதிதாக 2 காற்றழுத்த தாழ்வு நிலைகள் உருவாக வாய்ப்பு
வங்க கடலில் புதிதாக 2 காற்றழுத்த தாழ்வு நிலைகள் உருவாக வாய்ப்பு இருப்பதாகவும், இதனால் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
சென்னை,
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 27–ந்தேதி தொடங்கியது. தொடங்கிய நேரத்திலேயே சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் கனமழை பெய்தது. ஆனால் கடந்த சில நாட்களாக ஓரிரு இடங்களில் மட்டுமே மழை பெய்கிறது.
இந்த நிலையில் தென்மேற்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. பின்னர் அது தமிழகத்தை விட்டு நகர்ந்து ஆந்திரா வழியாக ஒடிசா சென்றது. நேற்றைய நிலவரப்படி ஒடிசா கடற்கரையில் வடமேற்கு கரையோரத்தில் நிலைகொண்டுள்ளது. அந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் விரைவில் வலு இழக்க உள்ளது. எனவே வருகிற 21–ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை தான் பெய்யும்.
இதற்கிடையே வருகிற 21–ந்தேதி அந்தமான் அருகே ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளது. அதன் பின்னர் 27–ந்தேதி தென்கிழக்கு வங்கக்கடலில் மற்றொரு புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாக உள்ளது.
அந்தமான் அருகே உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் பெரும்பாலும் தமிழகத்திற்கு மழை வர வாய்ப்பு இல்லை. இருந்தபோதிலும் காற்றின் சுழற்சியால் தென் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தென் கிழக்கு வங்கக்கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மீண்டும் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. எப்படியும் இந்த மாத (நவம்பர்) இறுதியில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்கண்ட தகவலை இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.