தமிழகம் முழுவதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் தொடங்கின


தமிழகம் முழுவதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் தொடங்கின
x
தினத்தந்தி 19 Nov 2017 3:45 AM IST (Updated: 19 Nov 2017 2:06 AM IST)
t-max-icont-min-icon

நீட் உள்பட பல்வேறு போட்டித் தேர்வுகளை எதிர்கொள்வதற்காக அரசு பள்ளி மாணவர்களுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தமிழகம் முழுவதும் நேற்று தொடங்கின.

சென்னை,

மருத்துவக் கல்விக்காக நீட் என்ற நுழைவுத் தேர்வை மத்திய அரசு நடத்துகிறது. இதை கொள்கை ரீதியாக தமிழக அரசு எதிர்த்தாலும், தமிழகத்தில் சட்டப்பூர்வமாக தடைசெய்ய முடியவில்லை. எனவே நீட் உள்பட எந்தவிதமான தேர்வையும் மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையில் அவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக ‘ஸ்பீட்’ என்ற நிறுவனத்துடன், தமிழக அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

இதன்படி, தமிழகத்தில் 412 மையங்கள் ஏற்படுத்தப்படும். அவற்றில் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவ, மாணவிகள் பங்கேற்று, போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிகளைப் பெறமுடியும். இது தமிழக அரசு இலவசமாக நடத்தும் பயிற்சி வகுப்பாகும்.

இந்த போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து நேற்று முதல் பயிற்சி வகுப்புகள் நடைமுறைக்கு வந்தன. தமிழகம் முழுவதும் ஏற்படுத்தப்பட்டுள்ள மையங்களுக்கு, சென்னை அரும்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ‘ஸ்பீட்’ நிறுவனத்தில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் பயிற்சி அளிக்கும் திட்டம் தொடங்கியது. இந்த பயிற்சி, ஒவ்வொரு சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் அந்தந்த மையங்களில் காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை ஒளிபரப்பப்படும்.

அந்த வகையில், சென்னை எம்.ஜி.ஆர்.நகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள மையத்தில் நேற்று காலையில் பயிற்சி வகுப்புகள் தொடங்கின. இதற்காக தனி வகுப்பறை ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதில் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஒளிபரப்பாகும் திரை வைக்கப்பட்டு இருந்தது. அந்த பள்ளி மாணவ, மாணவிகளோடு அருகில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 100-க்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர்.

இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய 3 பாடங்களில் பயிற்சி அளிக்கப்பட்டது. ‘ஸ்பீட்’ நிறுவனத்தில் இருந்து நிபுணர்கள் பாடவாரியாக பயிற்சி அளித்தனர். பயிற்சியின்போது அந்தந்த பள்ளியின் ஆசிரியர்கள் வந்திருந்தனர். பயிற்சி கொடுக்கும்போது இடையிடையே கேள்விகளை பயிற்சியாளர் கேட்டார். மையம் வாரியாக மாணவ, மாணவிகளிடம் அவர் பதிலை கேட்டார்.

பயிற்சியின்போது சந்தேகம் எழுந்தால், அதை ‘ஸ்பீட்’ நிறுவனத்துக்கு தெரிவிக்கும் வகையில், அந்த ஒளிபரப்பு உபகரணத்தில் பொத்தான் உள்ளது. அதை அழுத்தினால், எந்த மையத்தில் இருந்து சந்தேகம் கேட்கப்படுகிறது என்பதை ‘ஸ்பீட்’ நிறுவனத்தில் இருப்பவர்கள் அறிந்துகொள்வார்கள். பயிற்சியின்போது குறிப்பிட்ட கால இடைவெளியில் மாணவர்களுக்கு இடைவேளை விடப்பட்டது.

எம்.ஜி.ஆர்.நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிற்சி மையம் செயல்படுவதை விருகம்பாக்கம் எம்.எல்.ஏ. விருகை ரவி பார்வையிட்டார். பயிற்சி பெறும் மாணவ-மாணவிகளுக்கு அரசு பயிற்சி கையேட்டை வழங்கினார். அவரை பள்ளியின் தலைமை ஆசிரியர் க.சண்முகவேல் வரவேற்றார்.

Next Story