பெண்களுக்கு அரசு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு


பெண்களுக்கு அரசு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு
x
தினத்தந்தி 19 Nov 2017 4:00 AM IST (Updated: 19 Nov 2017 2:10 AM IST)
t-max-icont-min-icon

தீவைப்பு சம்பவத்தால் பாதிக்கப்படும் பெண்களுக்கு அரசு ரூ.3 லட்சம் இழப்பீடாக வழங்க உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் சூரியப்பிரகாசம் என்பவர் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்துள்ளார். அதில் கூறி இருந்ததாவது:– தமிழகத்தில் ஒருதலைக் காதலால் இளம்பெண்கள் மீது ஆசிட் வீசுவதும், பெட்ரோல் அல்லது மண் எண்ணெயை ஊற்றி தீ வைப்பதும் தொடர்ந்து நடக்கிறது. கடந்த 2006–ம் ஆண்டு லட்சுமி என்ற பெண் மீது ஆசிட் ஊற்றப்பட்டது. கடந்த 13–ந் தேதி ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த இளம்பெண் இந்துஜா மீது சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். இதில் இந்துஜா இறந்து போனார்.

அவரை காப்பாற்ற முயன்ற அவரது தாய் மற்றும் தங்கை தீக்காயங்களுடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் மிகுந்த வருத்தத்தை அளிக்கின்றன.

ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட லட்சுமி தொடர்ந்த வழக்கில் கடந்த 2015–ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், ‘பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு இழப்பீடாக ரூ.3 லட்சம் அரசால் வழங்கப்பட வேண்டும். தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மறுக்கக்கூடாது’ என்று கூறப்பட்டுள்ளது.

பெட்ரோல் மற்றும் மண் எண்ணெய் ஊற்றி தீ வைக்கப்படும் சம்பவத்தில் பாதிக்கப்படும் பெண்களுக்கும் இதேபோன்று அரசு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள், ஈவ்டீசிங் போன்றவற்றால் பாதிக்கப்படுபவர்கள் அளிக்கும் புகாரை விசாரிக்க இன்ஸ்பெக்டர் அந்தஸ்தில் பெண் போலீஸ் அதிகாரி ஒருவரை ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் பணி அமர்த்த வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல், ‘மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது இதுபோன்ற சம்பவங்கள் தமிழகத்தில் குறைவாகத்தான் நடக்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது’ என்றார்.

இதைதொடர்ந்து நீதிபதிகள், ‘வரும்காலங்களில் இதுபோன்று ஒரு சம்பவமும் நடைபெறக்கூடாது. இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அடுத்த ஆண்டு(2018)ஜனவரி மாதம் 5–ந் தேதி தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.


Next Story