தமிழக மீனவர்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்துகிறது மு.க.ஸ்டாலின் பேட்டி
துப்பாக்கி சூடு தொடர்பாக மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனின் கருத்து தமிழக மீனவர்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்துகிறது என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை,
தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு மு.க.ஸ்டாலின் அளித்த பதில்களும் வருமாறு:–
கேள்வி:– தமிழக மீனவர்களை இந்திய கடற்படை சுட்டதாகவும், மீனவர்களை இந்தியில் பேசுமாறு கட்டாயப்படுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் அது இந்திய கடற்படை சுட்ட குண்டு இல்லை என்றும், அதுபற்றி விசாரணை நடப்பதாகவும் மாறுபட்ட தகவலை தெரிவித்துள்ளாரே?.
பதில்:– ராமேசுவரம் பகுதியில் தமிழக மீனவர்கள் சுடப்படுவது தொடர்ந்து நடைபெறுகிறது. அதை கண்டித்தும், தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அங்கிருக்கக்கூடிய மீனவர்கள் தொடர்ந்து பல போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன், எங்கிருந்து அந்த குண்டு வந்தது என்று ஒரு கேள்வியை எழுப்பி, இப்படியொரு கருத்தினைச் சொல்லியிருப்பது, பாதிக்கப்பட்ட மீனவர்களின் உணர்வுகளை உள்ளபடியே கொச்சைப்படுத்துவது போல அமைந்திருக்கிறது, என்பதை மிகுந்த வேதனையோடு நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
கேள்வி:– ஜெயலலிதா வசித்து வந்த போயஸ் கார்டன் இல்லத்தில் இரவு முழுவதும் தொடர்ந்து சோதனை நடந்து கொண்டிருப்பது பற்றி உங்கள் கருத்து என்ன?.
பதில்:– ஏற்கனவே இதுகுறித்து நான் பலமுறை சொல்லியிருக்கிறேன். முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா இறந்தபிறகு, இந்த ஆட்சியில் தலைமைச் செயலாளர் ராம்மோகன்ராவ் அலுவலகத்திலும், வீட்டிலும் சோதனை நடைபெற்றது. அதன் மீது இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?. அதன் பிறகு, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடந்து, ரூ.89 கோடி ரூபாய் பணம் கொடுக்கப்பட்ட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு, அதில் முதல்–அமைச்சர் உள்பட பல அமைச்சர்களின் பெயர்கள் எல்லாம் இடம்பெற்றுள்ளன. அவர்கள் மீது இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?.
அதுமட்டுமல்ல, டி.ஜி.பி. மற்றும் இதே அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் குட்கா விற்பனை செய்ய மாமூல் வாங்கியதை அதே வருமான வரித்துறை சோதனை செய்து, வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கு என்னவானது?. நத்தம் விஸ்வநாதன் வீட்டில் சோதனை நடந்தது, அன்புநாதன் வீட்டில் சோதனை நடந்தது, மணல் மாபியா சேகர்ரெட்டி வீட்டிலும், அலுவலகத்திலும் சோதனை நடந்தது, சென்னை மேயராக இருந்த சைதை துரைசாமி வீட்டில் சோதனை நடந்தது, இவைகள் எல்லாம் என்ன ஆயின?.
எதற்காக இந்த சோதனைகள் நடக்கின்றன? அவற்றில் உண்மையாக என்னவெல்லாம் கண்டுபிடித்து இருக்கிறார்கள்? என்ன வழக்கு போட்டு இருக்கிறார்கள்? போன்றவற்றுக்கு எல்லாம் விளக்கம் வந்தபிறகுதான் இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல முடியும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.