தமிழக அரசு செய்தது என்ன? வெள்ளை அறிக்கை வெளியிட டாக்டர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை


தமிழக அரசு செய்தது என்ன? வெள்ளை அறிக்கை வெளியிட டாக்டர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை
x
தினத்தந்தி 22 Nov 2017 12:45 AM IST (Updated: 21 Nov 2017 11:28 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த தமிழக அரசு செய்தது என்ன? என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை, 

பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

சென்னையில் ஐக்கிய பொருளாதார அமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிக உச்சி மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமிழ்நாட்டில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக அடுத்த 6 ஆண்டுகளில் ரூ.16.27 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட உள்ளதாக உறுதி அளித்திருக்கிறார். இது தமிழக மக்களை மட்டுமின்றி, உலக முதலீட்டாளர்களையும் ஏமாற்றும் முயற்சியாகவே தோன்றுகிறது.

ஓ.பன்னீர்செல்வம் உறுதியளித்தபடி உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக அடுத்த 6 ஆண்டுகளில் ரூ.16.27 லட்சம் கோடி அளவுக்கு முதலீடு செய்யப்பட்டால் சிங்கப்பூருடன் போட்டியிடும் அளவுக்கு தமிழகத்தின் உள்கட்டமைப்பு மேம்படும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அந்த அளவுக்கு முதலீடு செய்வதற்கான வசதியோ, முதலீட்டை ஈர்ப்பதற்கான திறனோ தமிழக அரசுக்கு உள்ளதா? என்பது தான் பில்லியன் டாலர் கேள்வியாகும்.

தொலைநோக்குத் திட்டத்தின்படி உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் அரசுக்கு அக்கறை இருந்திருந்தால் 5½ ஆண்டுகளில் குறைந்தது ரூ.7.5 லட்சம் கோடி செலவழித்து இருக்கப்பட வேண்டும். ஆனால், தமிழக அரசின் சார்பில் ரூ.2,500 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது. எனவே, தொலைநோக்குத் திட்ட இலக்குகளை எட்ட தமிழக அரசு இதுவரை என்ன செய்திருக்கிறது; இனி என்ன செய்யப்போகிறது என்பதை உடனடியாக வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story