கந்துவட்டி கொடுமை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் விஷம் குடித்தனர்


கந்துவட்டி கொடுமை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் விஷம் குடித்தனர்
x
தினத்தந்தி 22 Nov 2017 12:59 PM IST (Updated: 22 Nov 2017 12:58 PM IST)
t-max-icont-min-icon

கந்துவட்டி கொடுமை காரணமாக தேனியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து உள்ளனர்.

தேனி, 

தேனி மாரியம்மன் கோவில் பட்டியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சரவணன் (வயது 40) இவரது மனைவி சுதா இவர்களுக்கு வைஷாலி (14), வைஷ்ணவி (12) ஆகிய 2 மகள்கள்.

சரவணன் போடி சிலமலையைச் சேர்ந்த சுருளி என்பவரிடம் ரூ.3 லட்சம் கடனாக வாங்கினார். அதற்கு ரூ.9 லட்சம் வரை வட்டி செலுத்தியுள்ளார். சில மாதங்களாக அவரால் வட்டித் தொகையை கட்ட முடியவில்லை.

இதனால் சுருளி  வட்டித் தொகையை கேட்டு மிரட்டினார். இதனால் மனமுடைந்த சரவணன் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். தனது எண்ணத்தை மனைவி சுதாவிடம் தெரிவித்தார். இதற்கு அவரும் சம்மதித்தார். 

நேற்று மாலை சரவணன் தேனி வந்தார். கடை வீதியில் ஒரு கடையில் பூச்சி மருந்தை வாங்கினார்.  இரவு நேரத்தில் சரவணன் 2 குழந்தைகளுக்கும் விஷத்தை கொடுத்தார். அவர்கள் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தனர். பின்னர் கணவனும், மனைவியும் மீதி இருந்த விஷத்தை குடித்தனர். 

இன்று காலை நீண்ட நேரமாகியும் வீட்டு கதவு திறக்கப்படவில்லை.  வீட்டுக்குள் 4 பேரின் முணகல் சத்தம்  கேட்டதால் அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஜன்னல் வழியே எட்டிப்பார்த்தனர். அப்போது 4 பேரும் வாயில் நுரை தள்ளியபடி உயிருக்கு போராடியதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

கதவை உடைத்து உள்ளே சென்று உயிருக்கு போராடிய 4 பேரையும் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு 4 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.  போலீசார் வழக்கு பதிவு செய்து கந்து வட்டி கேட்டு மிரட்டியதாக சுருளியை தேடி வருகிறார்கள்.

Next Story