புதிய மணல் குவாரிகளை திறக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
புதிய மணல் குவாரிகளை திறக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னை,
பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இப்போது 19 மணல் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றிலிருந்து தமிழக அரசே நேரடியாக மணலை எடுத்து விற்பனை செய்து வருகிறது. கட்டுமானப் பணிகள் வேகம் பெற்றுள்ள நிலையில் தமிழகத்தில் இப்போது மணலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பது உண்மை தான். எனினும், இது செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட தட்டுப்பாடு தானே தவிர, இயற்கையாக ஏற்பட்டதல்ல. இப்போது ஏற்பட்டுள்ள மணல் தட்டுப்பாட்டை தமிழக அரசு நினைத்தால் மிக எளிதாக சமாளித்து விட முடியும்.
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கத்துடன் தமிழகத்திலுள்ள அனைத்து மணல் குவாரிகளையும் மூட ஆணையிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தின் நான் வழக்குத் தொடர்ந்திருக்கிறேன். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இதுதொடர்பாக 3 வாரங்களுக்குள் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு அறிவிக்கை அனுப்பியுள்ளனர். அவ்வழக்கின் தீர்ப்புக்காகக் கூட காத்திருக்காமல் அவசர, அவசரமாக ஆற்று மணல் குவாரிகளை திறக்க தமிழக அரசு துடிப்பதன் நோக்கத்தை புரிந்துகொள்ள முடியவில்லை. காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் அதிக எண்ணிக்கையில் மணல் குவாரிகளை அமைப்பது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாக மட்டுமின்றி, காவிரிப்பாசன மாவட்ட மக்களின் நலன்களுக்கு எதிரானதாகவும் அமையும்.
ஆற்று மணல் குவாரிகளை நிரந்தரமாக மூடி, மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லை என்றால் தமிழகம் வெகுவிரைவில் பாலைவனமாவதை தடுக்க முடியாது. எனவே, புதிய குவாரிகளை திறக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story