மாணவர்கள் தற்கொலை சம்பவங்களை தடுக்க பள்ளி, கல்லூரிகளில் மனநல ஆலோசகர்களை அரசு நியமிக்க வேண்டும் தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தல்
மாணவர்கள் தற்கொலை சம்பவங்களை தடுக்க பள்ளி, கல்லூரிகளில் மனநல ஆலோசகர்களை அரசு நியமிக்க வேண்டும் தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தல்
திருவள்ளூர்
மாணவர்கள் தற்கொலை சம்பவங்களை தடுக்க அனைத்து பள்ளி, கல்லூரிகளில் மனநல ஆலோசகர்களை அரசு நியமிக்க வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
திருவள்ளூரை அடுத்த பட்டரைபெரும்புதூரில் நேற்று மாலை பாரதீய ஜனதா கட்சி சார்பில் கொடியேற்று விழா திருவள்ளூர் மாவட்ட தலைவர் லோகநாதன் தலைமையில் நடைபெற்றது. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கட்சி கொடியை ஏற்றிவைத்தார்.
அப்போது அங்கிருந்த பெண்கள், 2013–ம் ஆண்டு இந்த பகுதியில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்காக 60 வீடுகள் அகற்றப்பட்டது. அவர்களுக்கு இதுவரை மாற்று இடம் வழங்கவில்லை. தங்களுக்கு மாற்று இடம் வழங்கக்கோரி தமிழிசை சவுந்தரராஜனிடம் மனு அளித்தனர்.
பின்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:–
வேலூர் மாவட்டம் பனப்பாக்கத்தில் 4 பள்ளி மாணவிகள் ஆசிரியர்கள் திட்டியதால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மிகவும் கவலைக்குரியது. அதேபோல சென்னையில் கல்லூரி மாணவி ஒருவரும் ஆசிரியர் கண்டித்ததால் தற்கொலை செய்துகொண்டார். ஆசிரியர்கள் மாணவர்களை எப்படி கையாள வேண்டுமோ அப்படி கையாள வேண்டும்.
இதுபோன்ற தற்கொலை சம்பவங்கள் இனிமேலும் நடைபெறாமல் இருக்க அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் தமிழக அரசு மனநல ஆலோசகர்களை நியமித்து மாணவர்களின் பரச்சினைகளை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story