தமிழக மீனவர்களை தாக்கி மீன்கள் பறிப்பு இலங்கை கடற்படையினர் மீது புகார்


தமிழக மீனவர்களை தாக்கி மீன்கள் பறிப்பு இலங்கை கடற்படையினர் மீது புகார்
x
தினத்தந்தி 26 Nov 2017 2:45 AM IST (Updated: 26 Nov 2017 1:08 AM IST)
t-max-icont-min-icon

தமிழக மீனவர்களை தாக்கி மீன்களை இலங்கை கடற்படையினர் பறித்து சென்ற சம்பவம் 5 நாட்களில் 3-வது முறையாக நடைபெற்றுள்ளது.

வேதாரண்யம்,

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கோடியக்கரை பகுதியில் நாகை மாவட்டம் மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் இங்கு வந்து தங்கி மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் நாகை அருகே செருதூர் பகுதியை சேர்ந்த மீனவர்கள் 10-க்கும் மேற்பட்ட படகுகளில் நேற்று முன்தினம் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இவர்கள், கோடியக்கரைக்கு தென்கிழக்கே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், நாகை மீனவர்களை சுற்றி வளைத்து எல்லை தாண்டி வந்ததாக கூறி அவர்களின் படகில் இருந்த ஜி.பி.எஸ். கருவி மற்றும் பிடித்து வைத்திருந்த மீன்கள், நண்டுகள் ஆகியவற்றை பறித்துக்கொண்டும், வலைகளையும் அறுத்தனர். மேலும், மீனவர்களை தாக்கியும் விரட்டியடித்தனர்.

இதைதொடர்ந்து நாகை மீனவர்கள் நேற்று காலை 10.30 மணியளவில் கரை திரும்பினர். இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், இலங்கை கடற்படையினர் நீங்கள் தாக்கப்படுவது குறித்து ஊடகங்களுக்கும், பத்திரிகைகளுக்கும் பேட்டி கொடுக் கிறீர்களா? என்று கேட்டு தாக்கினர் என்று கூறினர்.

கடந்த 5 நாட்களில் 3-வது முறையாக நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story