தென்கிழக்கு ஆழ்கடல் பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் -சென்னை வானிலை மையம் எச்சரிக்கை
தென்கிழக்கு ஆழ்கடல் பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை
குமரிக்கடலில் கடந்த 30-ந்தேதி உருவான ஒகி புயல் குமரி மாவட்டத்தையும் கேரள கடற்கரை பகுதியையும் புரட்டிப் போட்டு கடும் சேதத்தை ஏற்படுத்தியது.
பின்னர் ஒகி புயல் தென்கிழக்கு அரபிக்கடலில் லட்சத்தீவை கடந்து சென்றது. அது தொடர்ந்து வடக்குவட மேற்கு திசையில் குஜராத்தை நோக்கி மணிக்கு 16 கி.மீ வேகத்தில் நகர்ந்து செல்கிறது.
நேற்று இரவு இந்த அதிதீவிர ஒகி புயல் கிழக்கு மத்திய மற்றும் அதனையொட்டியுள்ள தென்கிழக்கு அரபிக் கடலில் அமினி தீவில் இருந்து 480 கி.மீ மேற்குவடமேற்கு திசையிலும் மும்பைக்கு தெற்கு-தென்மேற்கு திசையில் 820 கி.மீ தொலைவிலும் குஜராத்தின் சூரத்தில் இருந்து தெற்கு தென்மேற்கில் 1020 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டு இருந்தது.
நாளை இந்த புயல் ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக மாறுகிறது. தொடர்ந்து தெற்கு குஜராத்-வடக்கு மராட்டியம் இடையே உள்ள பகுதியில் சூரத் அருகே நாளை நள்ளிரவு கரையை கடக்கும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.
மணிக்கு 55 முதல் 65 கி.மீ வேகத்தில் சூறை காற்றுடன் புயல் நெருங்குவதால் கடலில் சீற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே குஜராத், மராட்டியம், கோவா, வட கர்நாடக மாநில மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாளை முதல் குஜராத், வடக்கு மராட்டியம் ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்யும். புயல் கரையை கடந்த பின்பு வடகிழக்கு திசையில் சுழன்று படிப்படியாக வலு இழக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் பாலசந்திரன் கூறியதாவது:-
சென்னையின் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. காற்றழுத்த தாழ்வு நிலை, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். மீனவர்கள் ஆந்திர கடல்பகுதிக்கு, செல்ல வேண்டாம் .தென்கிழக்கு ஆழ்கடல் பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். நாளை வரை தமிழகம், புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் அதிகபட்சமாக அரண்மனைபுதூரில் 6 செ.மீ, பாபநாசம் 4 செ.மீ, பெரியகுளத்தில் 3 செ.மீ மழை பெய்து உள்ளது இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story