அதிகார மையங்களில் தமிழ் ஆட்சி செய்ய வேண்டும் கவிஞர் வைரமுத்து பேச்சு


அதிகார மையங்களில் தமிழ் ஆட்சி செய்ய வேண்டும் கவிஞர் வைரமுத்து பேச்சு
x
தினத்தந்தி 5 Dec 2017 2:30 AM IST (Updated: 5 Dec 2017 1:11 AM IST)
t-max-icont-min-icon

அதிகார மையங்களில் தமிழ் ஆட்சி செய்ய வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து பேசினார்.

சென்னை,

சென்னை லயோலா கல்லூரியின் இலக்கிய மன்ற விழாவில் ‘என்னை எழுதிய கவிதைகள்’ என்ற தலைப்பில் கவிஞர் வைரமுத்து சிறப்புச் சொற்பொழிவு ஆற்றினார். அருட்தந்தைகள் கல்லூரி அதிபர் ஏ.எம்.ஜெயபதி பிரான்சிஸ், கல்லூரியின் செயலர் ச.லாசர், கல்லூரி முதல்வர் ம.ஆரோக்கியசாமி சேவியர், அ.தாமஸ், தியாகராஜன்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

விழாவில் கவிஞர் வைரமுத்து பேசியதாவது:-

இளைஞர்கள் மத்தியில் உரையாற்றுவது எப்போதும் பிடிக்கும் எனக்கு. ஒரு துளி சமுத்திரம் ஆவதற்கு ஒரே வழி அது கடலில் விழுந்துவிடுவதுதான். அதேபோல் இளமையாக இருப்பதற்கு ஒரே வழி இளைஞர்களோடு இருப்பதுதான். மொழி என்பது மனிதனின் நாகரிகம்; கவிதை என்பது மொழியின் நாகரிகம் என்பார்கள். ஒரு முரட்டுக்கூட்டத்தில் பிறந்த என்னைக் கவிதைதான் செதுக்கியது. எனக்குள் இருந்த இரண்டாம் மனிதனை அது எழுப்பியது. கவிதையோடும் கலையோடும் கலக்கிறவன் ஒவ்வொரு துறையிலும் ஊட்டம் பெறுகிறான்.

கைபேசி வந்தபிறகு மனிதர்களின் நினைவாற்றல் மங்கிவிட்டது. இன்னொருவர் பெயர் சொல்லி அழைக்காவிட்டால் தங்கள் பெயரையே மறந்துவிடுவார்கள் போலிருக்கிறது. ஆனால் நினைவாற்றல் உள்ளவன்தான் எல்லாத்துறையிலும் வெற்றி பெறுகிறான். நினைவாற்றலைத் தூண்டுவது மனப்பாடம்; மனப்பாடத்திற்கு ஏற்றது கவிதை.

1960-களில் தமிழர்களுக்கு இருந்த தமிழுணர்ச்சி இப்போது அற்றுப்போயிருக்கிறது. இளைஞர்கள் தாய்மொழியின் பெருமைகளைச் சிந்திக்க வேண்டும். தமிழர்கள் எந்த மொழிக்கும் எதிரிகள் இல்லை. ஆனால் எந்த மொழியை எவர் திணித்தாலும் அவர்கள் நமக்கு நண்பர்கள் இல்லை.

அழியக்கூட்டிய மொழிகளின் பட்டியலில் தமிழ் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. கடைசித்தமிழன் ஒருவன் தமிழ் பேசும் வரைக்கும் தமிழ் அழியாது. ஆனால் அதிகார மையங்களில் தமிழ் ஆட்சி செய்ய வேண்டும். நீதிமன்றங்களில் ஆலயங்களில் அரசு அலுவலகங்களில் பள்ளிகளில் நின்று நிலவினால்தான் அது நீடு வாழும். பொதுவெளிகளில் இளைஞர்கள் இதுகுறித்து அதிகம் விவாதிக்க வேண்டும்.

இவ்வாறு கவிஞர் வைரமுத்து பேசினார்.

லயோலா கல்லூரியின் பழைய மாணவர்கள் சார்பில் ஏழை மாணவர்களுக்கும் நலிந்தவர்களுக்கும் உதவி செய்யும் அமைப்பாக லயோலா வாழ்வு கொடு என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. அந்த அமைப்பிற்கு கவிஞர் வைரமுத்து, தியாகராஜன்குமார் இருவரும் ஆளுக்கு ஒரு லட்சம் வீதம் இரண்டு லட்சம் நிதி வழங்கினார்கள். இருளர்களின் குடும்பங்களுக்குத் தார்ப்பாய்களையும், நலத்திட்ட உதவிகளையும் கவிஞர் வைரமுத்து வழங்கினார். விழா நிறைவில் தமிழ்த்துறைத் தலைவர் அமல்ராஜ் நன்றி கூறினார். 

Next Story