இந்திய தேர்தல் கமிஷன் எடுத்துள்ள நடவடிக்கைகள் போதாது தி.மு.க. புகார்
பணப்பட்டுவாடாவைத் தடுக்க இந்திய தேர்தல் கமிஷன் எடுத்துள்ள நடவடிக்கைகள் போதாது என்று தி.மு.க. கூறியுள்ளது.
சென்னை,
சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை, தி.மு.க.வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சந்தித்து புகார் மனு ஒன்றைக் கொடுத்தார். பின்னர் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி வருமாறு:-
ஆர்.கே.நகர் தொகுதியில் பணப்பட்டுவாடா செய்வதைத் தடுக்க பல நடவடிக்கைகளை இந்திய தேர்தல் கமிஷன் மேற்கொண்டிருந்தாலும், அதையும் மீறி 3-ந் தேதியில் இருந்து பணப்பட்டுவாடா செய்வது தொடங்கியுள்ளது.
பணத்தை போட்டு ஓட்டம்
ஒரு குறிப்பிட்ட கூட்டத்தினர் 42-வது வட்டத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். அந்த வழியாக சென்ற தி.மு.க.வினரைப் பார்த்துவிட்டு பணத்தைப் போட்டுவிட்டு ஓடிவிட்டனர். அந்த சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
அந்த வழக்கில் சம்மந்தப்பட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். பணம் தற்போது போலீஸ் வசம் உள்ளது. அது எவ்வளவு தொகை என்பது தெரியவில்லை.
குரூப் தெரியவில்லை
பணம் கொடுப்பது யார் என்பது தெரியவில்லை. கரை வேஷ்டி ஒரே கலரில் இருப்பதால் அவர்கள் எந்த குரூப்பைச் சேர்ந்தவர் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.
ஓட்டுக்கு பணம் கொடுக்கவில்லை என்றும், ஓட்டு கேட்பதற்கு உடன் வருபவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய பணம் அது என்றும் அந்த பணத்துக்கு விளக்கம் கூறுகிறார்கள். அது சரியல்ல.
நடவடிக்கை போதாது
தற்போது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் போதாது. இதற்கு ஒரு முடிவுகட்ட வேண்டுமானால் தேர்தல் கமிஷன் இன்னும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். மனுவில் இதை தெரிவித்துள்ளோம்.
மாலை 5 மணிக்குமேல் வாக்காளர்களை சந்திக்கக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளனர். ஆனால், அதை கண்காணிக்க ஒவ்வொரு வீதியிலும் கேமராக்கள் பொருத்தப்படவேண்டும். அந்த கேமராக்கள் வீதியின் இரண்டு பகுதியிலும், வீதியின் நடுவிலும் பொருத்தவேண்டும்.
கூடுதல் துணை ராணுவம்
அங்கு 700 தெருக்கள் உள்ளன. ஒவ்வொரு தெருவிலும் குறைந்தது 3 கேமராக்களை பொருத்த வேண்டும். அதை கண்காணிக்க சி.ஆர்.பி.எப். போலீசாரை அதிக எண்ணிக்கையில் பணியமர்த்த வேண்டும். அப்போதுதான் அச்சஉணர்வு வரும்.
தற்போது 20 கம்பெனி துணை ராணுவம் கேட்கப்பட்டுள்ளது. இது போதாது. 40 கம்பெனி துணை ராணுவப் படையினர் வரவேண்டும். அப்போதுதான் அந்தத் தொகுதி முழுவதையும் 24 மணிநேரமும் கண்காணிக்க முடியும்.
நம்புகிறோம்
தவறாக நடந்துகொள்ளும் சில காவல்துறை அதிகாரிகளின் பெயர்களை பட்டியலிட்டு வருகிறோம். தொடர்ந்து ஒருதலைப்பட்சமாக செயல்பட்டால் அவர்களை இடமாற்றம் செய்வதற்கு புகார் கொடுப்போம். குறிப்பாக போலீஸ் இணை கமிஷனர் ஒருவர் ஒருதலைபட்சமாக செயல்படுகிறார்.
அவரைப் பற்றிய புகாரை தயார் செய்து நாளை அல்லது நாளை மறுநாள் தி.மு.க. சட்டத்துறை சார்பில் கொடுப்போம். தலைமைத் தேர்தல் அதிகாரி நிச்சயம் நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story