புயல் சின்னம், வடமேற்கு திசை நோக்கி நகருகிறது


புயல் சின்னம்,  வடமேற்கு திசை நோக்கி நகருகிறது
x
தினத்தந்தி 5 Dec 2017 5:45 AM IST (Updated: 5 Dec 2017 3:10 AM IST)
t-max-icont-min-icon

வங்க கடல் பகுதியில் உருவான புயலானது வட மேற்கு திசையை நோக்கி நகருகிறது. இதனால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை, 

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் நிருபர் களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நேற்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்றும் (நேற்றும்) அதே பகுதியில் நீடிக்கிறது. அடுத்த 24 மணி நேரத்தில் அது, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக (புயல் சின்னமாக) மாறக்கூடும். டிசம்பர் 6-ந் தேதி வரையிலான காலக்கட்டத்தில், அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கரையை நோக்கி நகரும்.

இதனால் தெற்கு வங்கக்கடல் பகுதியில் மீனவர்கள் யாரும் ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம். அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும். சென்னையை பொருத்தவரை நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யும்.

கனமழை எச்சரிக்கை

கடந்த 24 மணி நேரத்தை பொருத்தமட்டில் அதிகபட்சமாக, தேனி மாவட்டம் அரண்மனைபுதூரில் 6 செ.மீ., நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் 4 செ.மீ., பெரியகுளத்தில் 3 செ.மீ., சிதம்பரம், பரங்கிப்பேட்டை பகுதிகளில் 2 செ.மீ. மழையும், ஆனைக்காரன்சத்திரம், திருவாடணை, சீர்காழி, மணிமுத்தாறு உள்ளிட்ட பகுதிகளில் தலா 1 செ.மீ. மழையும் பதிவாகி யுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழகத்திற்கு ஆபத்து இல்லை

ஆனால் சில தனியார் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில், தற்போது வங்க கடல் பகுதியில் உருவாகியுள்ள வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக மாறி, புயல் வலுவிழந்து ஆந்திர கடற்கரை நோக்கி சென்று விடும். இதனால் சென்னை உள்ளிட்ட வட தமிழகத்திற்கு புயல் ஆபத்து இல்லை எனவும் கூறியுள்ளனர். ஆனால், இந்த தாழ்வு மண்டலத்தால் சென்னை உள்ளிட்ட வட தமிழக பகுதியில் கனமழை பெய்யும் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story