விஷால் வேட்பு மனு தள்ளுபடி என்ற அறிவிப்பு வெளியானதால் பட அதிபர்கள் போராட்டம் வாபஸ்
விஷால் வேட்பு மனு தள்ளுபடி என்ற அறிவிப்பு வெளியானதால் அவருக்கு எதிராக நடந்த பட அதிபர்கள் உள்ளிருப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
சென்னை,
நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியிலும் நடிகர் சங்க பொதுச் செயலாளர் பொறுப்பிலும் இருக்கிறார். அவர் ஆர்.கே.நகர் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்ததற்கு தயாரிப்பாளர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அவர்கள் அனைவரும் டைரக்டரும் தயாரிப்பாளருமான சேரன் தலைமையில் சென்னை அண்ணாசாலையில் உள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் நேற்று முன்தினம் முற்றுகையிட்டு விஷாலை கண்டித்து கோஷம் எழுப்பினார்கள்.
எதிர்த்து உள்ளிருப்பு போராட்டம்
தேர்தலில் போட்டியிடும் விஷால் தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்று வற்புறுத்தினார்கள். பின்னர் சங்க அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் தொடங்கினார்கள். விஷால் ராஜினாமா செய்வதுவரை போராட்டம் தொடரும் என்றும் அறிவித்தனர். இதனால் பட உலகில் பரபரப்பு ஏற்பட்டது.
உள்ளிருப்பு போராட்டம் நடத்துபவர்களை வெளியேற்ற வேண்டும் என்று விஷால் தரப்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போராட்டம் நடத்தும் சேரன் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விஷால் அறிவித்தார்.
வேட்பு மனு நிராகரிப்பு
உள்ளிருப்பு போராட்டம் நடத்திய பட அதிபர்களை, நடிகர் ராதாரவி, நடிகை ராதிகா சரத்குமார், டைரக்டர் டி.ராஜேந்தர் ஆகியோர் நேற்று நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். இந்த நிலையில் ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரியால் விஷால் வேட்பு மனு நேற்று திடீரென்று நிராகரிக்கப்பட்டது என்ற அறிவிப்பு வெளியானது.
படஅதிபர்கள் போராட்டம் வாபஸ்
இதைத்தொடர்ந்து பட அதிபர்களின் உள்ளிருப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இதுகுறித்து டைரக்டர் சேரன் கூறியதாவது:-
‘தேர்தலில் போட்டியிடும் விஷால் தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி அமைதியான அகிம்சை முறையில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினோம்.
விரைவில் கூட உள்ள சங்கத்தின் பொதுக்குழுவில் எங்கள் கேள்விகளை எழுப்புவோம்’.
இவ்வாறு சேரன் கூறினார்.
Related Tags :
Next Story