ஜெயலலிதா நினைவிடத்தில் டி.டி.வி.தினகரன் அஞ்சலி ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக வந்தார்


ஜெயலலிதா நினைவிடத்தில் டி.டி.வி.தினகரன் அஞ்சலி ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக வந்தார்
x
தினத்தந்தி 6 Dec 2017 4:00 AM IST (Updated: 6 Dec 2017 1:45 AM IST)
t-max-icont-min-icon

ஜெயலலிதா நினைவிடத்தில் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக வந்து அஞ்சலி செலுத்தினார்.

சென்னை, 

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர்கள் நேற்று பிற்பகல் 12.50 மணியளவில் அண்ணாசிலை அருகில் இருந்து ஊர்வலமாக சென்றனர்.

டி.டி.வி.தினகரன் பிரசார வாகனத்தில் ஏறி ஊர்வலத்தில் பங்கேற்றார். வாலாஜா சாலை, சேப்பாக்கம் வழியாக மெரினா கடற்கரை அருகில் உள்ள ஜெயலலிதா நினை விடத்துக்கு பிற்பகல் 1.40 மணிக்கு ஊர்வலம் வந்தது. ஜெயலலிதா நினைவிடத் தில் டி.டி.வி.தினகரன் மலர் வளையம் வைத்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அப்போது தங்கதமிழ்ச்செல்வன், செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். பின்னர் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

மீட்டு காட்டுவோம்

எனக்கு பின்னாலும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் அ.தி.மு.க. மக்களுக்காகவே இயங்கும் என்ற சத்திய வரிகளை பதவி சலுகைக்காக துரோக எட்டப்பர் கூட்டத்தினர் மறந்தாலும் ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்களாகிய நாம் நம் தாயின் தீர்க்கத்தரிசன வாக்கியத்தை நிறை வேற்றியே காட்டுவோம்.

இரட்டை இலை சின்னமும், அ.தி.மு.க. என்கிற பெயரும் நம்மிடம் இருந்து பறிக்கப்பட்டு இருந்தாலும், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் ஆசியோடு, நீதியின் தீர்ப்பை பெற்று இரட்டை இலை சின்னத்தையும், அ.தி.மு.க.வையும் மீட்டு காட்டுவோம். நாம் பிரகடனப்படுத்தியுள்ள நமது போர் பரணியின் முதல் வெற்றியினை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டி.டி.வி.தினகரன் வாகை சூடிட அர்ப்பணிப்போடு உழைத்திடுவோம் என்று உறுதிமொழி எடுக்கப்பட்டது.

பின்னர் தங்கதமிழ்ச்செல்வன் நிருபர்களிடம் கூறியதாவது:-

துரோகத்தின் உச்சம்

ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்த பகல் 12 மணிக்கு அனுமதி வழங்கி இருந்தார்கள். அதன்படி, அஞ்சலி செலுத்த டி.டி.வி.தினகரனும், நாங்களும் வந்தோம். ஆனால் போலீசார் எங்களை உள்ளே அனுமதிக்கவில்லை. துரோகத்தின் உச்சத்துக்கு இந்த ஆட்சி சென்று கொண்டு இருக்கிறது.

உறுதிமொழி எடுப்பதற்காக மேடை அமைத்தது அரசாங்கம். அதை அவசர அவசரமாக பிரித்து எடுத்து சென்று இருக்கிறார்கள். இந்த மேடை போல ஆட்சியும் சீக்கிரம் போய் விடும். அவர்களை ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிக்காது. இரட்டை இலை எங்களுக்கு தான் வரும். இறுதி தீர்ப்பு எஜமான்களாகிய மக்கள் கையில் இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story