புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பங்களுக்கு அடிப்படை வசதிகள் ஐகோர்ட்டு உத்தரவு
புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
சென்னை ஐகோர்ட்டில், மீனவர்கள் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் பீட்டர் ராயன் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘ஒகி புயலால் கடலுக்குள் காணாமல்போன மீனவர்களை உடனடியாக மீட்க வேண்டும். இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும். பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம் வழங்க உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தார்.
அதேபோல, புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு அடிப்படை வசதிகளை செய்துதர அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று வக்கீல் சூரியபிரகாசமும் மனு தாக்கல் செய்திருந்தார்.
மீட்கவில்லை
இந்த மனுக்கள் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி ஆர்.ஹேமலதா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘நடுக்கடலில் தத்தளிக்கும் மீனவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்றும் மனுதாரர்கள் தரப்பில் குற்றம்சாட்டினர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மத்திய, மாநில அரசுகளின் சார்பில் ஆஜரான வக்கீல்கள், காணாமல்போன மீனவர்களை கண்டுபிடிக்க தேவையான நடவடிக்கை எடுத்துவருவதாகவும், மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் நேரில் சென்று கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறினர்.
அடிப்படை வசதிகள்
அனைத்துதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
ஒகி புயலால் கடலுக்குள் காணாமல்போன மீனவர்களை கண்டுபிடிக்க கடலோர காவல்படையும், கடற்படையும் தீவிர தேடுதல் வேட்டை நடத்த வேண்டும். புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களை சரியாக அடையாளம் கண்டு, அவர்களுக்கு தேவையான உணவு, உடை, உறைவிடம், மருத்துவம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் உடனடியாக செய்துகொடுக்க வேண்டும்.
இயற்கை சீற்றங்களுக்காக மத்திய, மாநில அரசுகளை தேவையின்றி குறை கூறக்கூடாது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை அரசு செய்கிறதா? என்று தான் பார்க்க வேண்டும்.
2015-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசு உத்தரவின் அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு பணிகளை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக செய்யவேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுதாபமும் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story