கன்னியாகுமரியை பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும் மு.க.ஸ்டாலின் பேட்டி
கன்னியாகுமரியை பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை,
தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், சென்னை விமான நிலையத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பேரிடராக அறிவிக்க வேண்டும்
கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் ஒகி புயலால் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும், அந்தந்த சட்டமன்ற உறுப்பினர்களுடன் நான் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டேன். அந்த ஆய்வில் இருந்து ஒகி புயலால் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் பற்றி மத்திய - மாநில அரசுகள் எந்தவித கவலையும் படவில்லை என்பதை நான் உணர்ந்து கொண்டேன்.
கேரள மாநில முதல்-மந்திரி அந்த மாநிலத்தை பேரிடர் மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருப்பது போல, கன்னியாகுமரி மாவட்டத்தை பேரிடர் மாவட்டமாக அறிவித்து, அதன் மூலம் மத்திய அரசு வழங்கக்கூடிய நிதியை பயன்படுத்தி, பாதிக்கப்பட்டிருக்கின்ற பொதுமக்களுக்கு முறையாக வழங்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
மத்திய அரசு நடவடிக்கை
அதுமட்டுமல்ல, கன்னியாகுமரியில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மீனவர்களையும், பொதுமக்களையும் நான் சந்தித்து நிவாரண உதவிகள் வழங்குவதற்காக நேற்றைய தினம் அங்கு சென்றபோது, சில இடங்களில் இருந்தவர்களை கட்டாயப்படுத்தி வெளியேற்றி இருக்கிறார்கள். அப்படி வெளியேற்றியபோது, அவர்களை வேறு இடத்தில் தங்க வைத்திருந்தால் முறையாக இருந்திருக்கும். ஆனால், அதையும் செய்யவில்லை. இந்த நிலைதான் அங்கு இருக்கிறது. எனவே, மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதனைத் தொடர்ந்து நிருபர்கள் அவரிடம், “ஏற்கனவே வார்தா புயல் பாதிப்பிற்கான நிவாரண நிதியை மத்திய அரசு வழங்கவில்லையே?” என்று கேள்வி எழுப்பியதற்கு, “கிட்டத்தட்ட 88 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இந்த ஆட்சி மத்திய அரசிடம் நிதி கேட்டிருக்கிறது. ஆனால், அந்த நிதி இதுவரை வந்து சேரவில்லை. அதுபோன்ற நிலைதான் இப்போதும் உருவாகுமோ என்ற அச்சம் எனக்கு இருக்கிறது” என்று மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார்.
Related Tags :
Next Story